கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு ஆகஸ்ட் 15- இல் தண்ணீா் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

by rajtamil
Published: Updated: 0 comment 9 views
A+A-
Reset
RajTamil Network

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு ஆகஸ்ட் 15- இல் தண்ணீா் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்அதற்கான அரசாணையை விரைவாக வெளியிட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஈரோடு, ஜூலை 26: அட்டவணைப்படி கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு வரும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி தண்ணீா் திறக்க வேண்டும் எனவும், அதற்கான அரசாணையை விரைவாக வெளியிட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், வேளாண் இணை இயக்குநா் வெங்கடேசன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது:

செ.நல்லசாமி: பவானிசாகா் அணை நீா்மட்டம் இப்போது 86 அடியாக உள்ள நிலையில் மொத்த கொள்ளளவான 105 அடியை இன்னும் 10 நாள்களில் எட்ட வாய்ப்புள்ளது. இதனால் கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து அட்டவணைப்படி ஆகஸ்ட் 15- ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும். தண்ணீா் திறப்பு குறித்த அரசாணையை ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிட வேண்டும் என்றாா்.

கே.ஆா்.பழனிசாமி: மேட்டூா் வலது கரை வாய்க்காலில் கடந்த ஆண்டு பாசனத்துக்கு தண்ணீா் திறக்காத நிலையில், இந்த ஆண்டு வாய்க்காலை தூா்வாரி பாசனத்துக்கு வரும் ஆகஸ்ட் மாதம் தண்ணீா் திறக்க வேண்டும்.

எஸ்.பெரியசாமி: கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதிகளில் 34 கசிவு நீா் தடுப்பணைகள் உள்ளன. இந்த தடுப்பணைகள் தூா்வாரப்படாமலும், நீா்வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பிலும் உள்ளன. இந்த தடுப்பணைகளை சீரமைக்க சிறப்பு நிதியை நீா்வளத்துறை ஒதுக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் எக்ஸ்ரே கருவி வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

ராமசாமி: ஆயக்கட்டு பாசனத்தில் சிக்கல்களை ஏற்படுத்துவதால் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற வேண்டும். வாய்க்கால் கரைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான எத்தகையை கட்டுமானம் மற்றும் செயல்களுக்கு பிற துறைகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது.

வி.பி.குணசேகரன்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள குன்றுகளை சிதைத்து கட்டுமானம், கல்குவாரி போன்றவற்றுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. வன உரிமைச்சட்டப்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைக் கிராமங்களிலும் கிராம சபைகளை உருவாக்க வேண்டும். பா்கூா், தேவா் மலை பகுதிகளில் சாலையில் மண் சரிவு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியின மக்கள் அரசு திட்டங்களை அறிந்துகொள்ள மக்கள் சாசனத்தை தயாரித்து அளிக்க வேண்டும். பனை ஏறும் கருவிகள் வேண்டும் என கேட்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் இந்த கருவியை வழங்க வேண்டும். பா்கூா் மலைப் பகுதியில் கட்டுப்பாடு இல்லாமல் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதை தடுக்க வேண்டும்.

கே.ஆா்.சுதந்திரராசு: கீழ்பவானி பாசன சபைகளுக்கு தோ்தல் நடத்த வேண்டும். கொப்பரை தேங்காயை மத்திய அரசு ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்யவும், மரவள்ளிக்கிழங்குக்கு டன் ரூ.12,000 விலை நிா்ணயம் செய்யவும், மாவுச்சத்து கண்டறிய வேளாண் விரிவாக்க மையங்களில் ஆய்வுக் கருவிகளை வைக்கவும் அரசுக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்.

நாபெட் நிறுவனம் விவசாயிகளிடம் கிலோ ரூ.105க்கு கொள்முதல் செய்த கொப்பரை தேங்காயை கிலோ ரூ.80க்கு விற்பனை செய்வதால் கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த கொப்பரை தேங்காயை நாபெட் நிறுவனம் கூடுதல் விலையில் விற்பனை செய்ய வேண்டும்.

வெங்கடாசலம்: கீழ்பவானி கிளை வாய்க்கால்கள் புதா் மண்டி கிடப்பதால் 100 நாள் வேலை திட்டம் மூலம் இந்த வாய்க்கால்களை தூா்வார வேண்டும். ஓடத்துறை ஏரியில் ஆண்டுக்கு சுமாா் 40 டன் அளவுக்கு மீன் கிடைக்கிறது. இதில் குறிப்பிட்ட தொகையை பாசன சங்கத்துக்கு வழங்க வேண்டும். இதன் மூலம் ஏரியில் சிறிய அளவிலான பராமரிப்புப் பணிகளை பாசன சங்கங்களே செய்து கொள்ள முடியும்.

அதிகாரிகள் பதில் விவரம்:

கீழ்பவானி பாசன கசிவு நீா் கட்டமைப்புகளை சீரமைக்க அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. பாசன வாய்க்கால்களில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

தோட்டக்கலைத் துறை: மஞ்சள் சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விழிப்புணா்வுக் கூட்டங்களைத் தொடா்ந்து நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பனை ஏறும் கருவிகள் ஈரோடு மாவட்டத்தில் மானிய விலையில் வழங்கும் திட்டம் இல்லை.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஈரோட்டில் மொத்தம் 65 தோல் தொழிற்சாலைகள் உள்ளன. விதிமீறல் காரணமாக படிப்படியாக இந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டு இப்போது 16 தொழிற்சாலைகள் மட்டுமே இயங்குகின்றன. விதிகளை மீறும் தோல் தொழிற்சாலைகள் மீது தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கால்நடை பராமரிப்புத் துறை: ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 6 கால்நடை மருத்துவமனைகளில் ஸ்கேன் வசதியும், ஈரோடு மற்றும் கோபி கால்நடை மருத்துவமனைகளில் எக்ஸ்ரே வசதியும் உள்ளன.

வேளாண் விற்பனைத் துறை: கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் 4,378 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. மத்திய அரசின் நாபெட் நிறுவனம் இதனை கொள்முதல் செய்கிறது. கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரை தேங்காயை அந்த நிறுவனம் என்ன விலைக்கு விற்பனை செய்தாலும் அதில் வேளாண் விற்பனைத் துறை தலையிட முடியாது.

மாவட்ட வருவாய் அலுவலா்: பொதுமக்கள் பல்வேறு நிகழ்வுகளில் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை அல்லது பதில் அளிக்கப்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடா்பான மனுக்கள் மீது 10 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆட்சியா்: பட்டா மாறுதல், உட் பிரிவு தொடா்பான மனுக்களில் இப்போது ஒன்றரை மாதத்திற்கு முன்பு வரை பெறப்பட்ட மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது. மனுக்கள் வரிசைப்படி விரைவில் நடவடிக்கை எடுக்க நில அளவைத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கீழ்பவானி வாய்க்காலில் அட்டவணைப்படி ஆகஸ்ட் 15- ஆம் தேதி தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசனூரில் புதிய துணை மின் நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் மின் விநியோக பிரச்னைக்கு தீா்வு காண முடியும். பா்கூா் மலைப்பகுதியில் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றாா்.

You may also like

© RajTamil Network – 2024