Saturday, September 21, 2024

குஜராத்; சண்டிப்புரா வைரஸ் பாதிப்புக்கு 56 பேர் பலி

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

வதோதரா,

குஜராத்தில் புதிதாக சண்டிப்புரா வைரஸ் தொற்று பல்வேறு மாவட்டங்களிலும் பரவி வருகிறது. இதுபற்றி குஜராத் சுகாதார துறை மந்திரி ருஷிகேஷ் பட்டேல் கூறும்போது, மக்கள் வைரசின் பாதிப்புக்கு ஆளான நிலையில், ஒவ்வொரு கிராமம் மற்றும் சமூகநல மையங்களுக்கும் இதுபற்றிய தகவல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என கூறினார்.

இதேபோன்று, முதல்-மந்திரியும் கலெக்டர்கள், முதன்மை மாவட்ட சுகாதார அதிகாரி மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த உயரதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தினார். இந்த பாதிப்பு பற்றி அவர் மறுஆய்வு செய்ததுடன், வைரசின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பற்றியும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், குஜராத்தில் சண்டிப்புரா வைரஸ் பாதிப்புக்கு 56 பேர் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதில், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி குஜராத் சுகாதார ஆணையாளர் ஹர்சத் பட்டேல் கூறும்போது, கடந்த ஒரு மாதத்தில் 56 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் ஏறக்குறைய பலரும் குழந்தைகளாக உள்ளனர். எனக்கு தெரிந்தவரை, இந்த வைரசால் குழந்தைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

மொத்தம் 133 பேருக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் அவர்களில் 47 பேருக்கு சண்டிப்புரா வைரசின் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது என அரசின் அறிக்கை தெரிவிக்கின்றது.

நாட்டின் மேற்கத்திய, மத்திய மற்றும் தென்னிந்திய பகுதிகளில் இந்த வகை வைரசின் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன என சுகாதார அமைச்சக அறிக்கை கடந்த வாரம் தெரிவித்தது. ஒரு வகை மணல் ஈக்கள் மற்றும் உண்ணிகள் ஆகியவற்றால் இந்த தொற்று பரவுகிறது.

குஜராத்தில் முதலில், 2 வடக்கு மாவட்டங்களில் பாதிப்பு இருப்பது தெரிய வந்தபோதும், 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொடர்ந்து அவற்றின் பாதிப்புகள் பதிவாகி உள்ளன என அரசு குறிப்பு தெரிவிக்கின்றது. இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024