Sunday, September 22, 2024

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 – கார்கே வாக்குறுதி

by rajtamil
Published: Updated: 0 comment 8 views
A+A-
Reset

ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 3 கட்ட தேர்தலில் பதிவாகும் அனைத்து வாக்குகளும் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்தநிலையில் அங்கு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டு கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் கவனம் பெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்த இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்காவிட்டாலும் பாஜகவுக்கு கடுமையாக நெருக்கடி அளித்தது. பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. இதனால் மக்களை ஈர்க்கும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறது. இந்தநிலையில், ஜம்மு – காஷ்மீர் சட்டமன்ற தேர்தலையொட்டி அனந்தநாக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜம்மு-காஷ்மீரில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 வழங்கப்படும். காங். கூட்டணி வென்றால் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சத்தில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும். ஒரு லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்புதல், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 11 கிலோ அரிசி வழங்கப்படும். சுய உதவிக் குழுப் பெண்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் குடியேறிய காஷ்மீர் பண்டிட்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும். பொது விநியோக திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு 11 கிலோ தானியம் வழங்கப்படும். ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாஜகவும், பிரதமர் மோடியும் பறித்துவிட்டனர். அவ்வாறு பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுப்போம் என்பதே எங்களின் வாக்குறுதி என்றார்.

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாட்டில் திமுக அரசால் கொண்டு வரப்பட்டது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சி தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தியது. மராட்டியத்தில் தற்போதுள்ள ஏக்நாத் ஷிண்டே அரசும் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. வெற்றிகரமான இந்த திட்டத்தை ஜம்மு, காஷ்மீரில் செயல்படுத்தலாம் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024