குடும்ப தகராறு; கோர்ட்டில் மருமகனை சுட்டு கொன்ற உதவி ஐ.ஜி.

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

சண்டிகார்,

பஞ்சாப் காவல் துறையில் உதவி ஐ.ஜி.யாக இருப்பவர் மல்வீந்தர் சிங் சித்து. இவருடைய மருமகன் ஹர்பிரீத் சிங். நீர்ப்பாசன துறையில், இந்திய வருவாய் பணி அதிகாரியாவார். இவருடைய மாமனார் சித்து பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், சித்து மற்றும் சிங் குடும்பத்தில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக, சண்டிகார் குடும்ப நீதிமன்றத்திற்கு இருவரும் சென்றுள்ளனர். இருதரப்பினருக்கும் இடையே, கோர்ட்டில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி நடந்து வந்தது.

அப்போது, சித்து கழிவறைக்கு சென்று வருகிறேன் என கூறி அதற்கு அனுமதி கேட்டு வெளியேறி இருக்கிறார். அவருடைய மருமகன் சிங், அதற்கான வழியை காட்டுவதற்காக முன்வந்துள்ளார். இருவரும் அந்த அறையை விட்டு வெளியேறி உள்ளனர்.

இந்த சூழலில், சில நிமிடங்களில் 5 முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதனால், கோர்ட்டில் இருந்தவர்கள் அலறியுள்ளனர். சித்து மருமகனை துப்பாக்கியால் சுட்டது தெரிய வந்துள்ளது. இதில், 2 குண்டுகள் சிங்கை தாக்கியதில் அவர் சரிந்து விழுந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகே இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர்.

அவரை சுட்டு விட்டார்கள். எவரேனும் அவரை மருத்துவமனைக்கு தூக்கி செல்லுங்கள் என ஒருவர் சத்தம் போட்டார். கோர்ட்டு வளாகத்தில் இருந்த சில வழக்கறிஞர்கள் ஓடிச்சென்று சித்துவை பிடித்தனர். அவரை அறை ஒன்றில் அடைத்து வைத்து விட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் வந்து அவரை பிடித்து சென்றுள்ளனர். இதில் சிலர், தரையில் விழுந்து கிடந்த சிங்கை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். எனினும், அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024