குன்னூரில் அபாயகரமான மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை சீரமைக்கும் பணி தொடக்கம்
குன்னூர்: குன்னூரில் அபாயகரமாக உள்ள மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. கோத்தகிரி பகுதியில் மின் கம்பி உரசி அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் குன்னூரில் அபாயகரமாக உள்ள மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர் பிரதாப் தாழ்வாகச் சென்ற மின் கம்பியில் பேருந்து உரசியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சாலை ஓரங்களில் அபாயகரமாக உள்ள மின் கம்பிகள் மற்றும் மின்கம்பங்களை சீரமைக்கவும். மின்கம்பங்கள் மீது சாய்ந்துள்ள மரங்கள் மற்றும் அடர்ந்த செடி கொடிகளை அகற்றவும் மின்வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன் பேரில் குன்னூரில் மின் கம்பிகள் மற்றும் மின்கம்பங்களால் ஆபத்து நிகழலாம் என்று கருதப்படும் இடங்களை குன்னூர் கோட்டாட்சியர் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்தனர். இதனையடுத்து தற்போது சாலையோரம் இருக்கக்கூடிய அபாயகரமான மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் தன்னார்வ அமைப்பினருடன் சேர்ந்து ஈடுபட்டுள்ளனர். சாலையோரத்தில் இருக்கும் ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், மின் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஐந்து குழுக்களாக பிரிந்து பல்வேறு பகுதிகளிலும் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.