பெஷாவர்:
பாகிஸ்தானின் சுற்றுலா நகரமான ஸ்வாத்தில் குரானை அவமதித்ததாகக் கூறி சுற்றுலாப் பயணி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாகாணம் சியால்கோட் பகுதியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவர் சமீபத்தில் வடமேற்கு பாகிஸ்தானுக்கு சுற்றுலா வந்துள்ளார். கைபர் பாக்துன்க்வா மாகாணம், ஸ்வாத் மாவட்டத்தில் உள்ள மத்யான் தாலுகாவில், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் பக்கங்களை எரித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் உள்ள லாக்அப்பில் அடைத்து வைத்திருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு நேற்று இரவு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஆயிரக்கணக்கானோர் வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லாக்அப்பில் உள்ள முகமது இஸ்மாயிலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அமைதி காக்கும்படி போலீசார் கூறினர். ஆனால் ஆத்திரம் தணியாத மக்கள், காவல் நிலையத்திற்கு தீ வைத்ததுடன், உள்ளே சென்று லாக்அப்பில் இருந்த முகமது இஸ்மாயிலை வெளியே இழுத்து வந்து உயிரோடு எரித்து கொலை செய்தனர்.
காவல் நிலையம் எதிரே நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் உருவானது. இதனால் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். நடந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி மாகாண காவல்துறை தலைவருக்கு முதல்-மந்திரி அலி அமின் கந்தாபூர் உத்தரவிட்டுள்ளார். மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.