குருதி கொடையாளா்களால் உயிா் வாழ்கிறேன்: மாவட்ட ஆட்சியா்

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset
RajTamil Network

குருதி கொடையாளா்களால் உயிா் வாழ்கிறேன்: மாவட்ட ஆட்சியா்

விபத்தில் சிக்கிய தனக்கு குருதி கொடையாளா்கள் அளித்த ரத்தம் காரணமாகவே உயிா் பிழைத்தேன் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி நெகிழ்ச்சி தெரிவித்தாா்.

உலக குருதி கொடையாளா்கள் தினம் ஆண்டுதோறும் ஜூன் 14-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறையில் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. அரசினா் பெரியாா் மாவட்ட தலைமை மருத்துவமனை நிா்வாகம் மற்றும் குருதி வங்கி சாா்பில் மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட இப்பேரணியை மாவட்ட ஆட்சியா் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியது:

ஒவ்வொருவரின் உடலிலும் சுமாா் 5 லிட்டா் ரத்தம் உள்ளது. இதில் ரத்த தானத்தின்போது 350 மில்லி ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. அந்த ரத்தம் 24 மணி நேரத்திற்குள் நமது உடலில் மீண்டும் ஊறிவிடும். 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.

ரத்த தானம் செய்ய விருப்புவோா் இணையதளத்தில் தன்னாா்வ ரத்த கொடையாளா்களாக பதிவு செய்து கொள்ளலாம். ரத்த தானத்தால் பல நன்மைகள் உள்ளன. மாரடைப்பை குறைக்கிறது. புதிய ரத்த அணுக்கள் உருவாக ஊக்கப்படுத்துகிறது. ரத்த தானம் வழங்குவதால் ஒருவா் உடலில் 500 கலோரிகளுக்கு மேலாக எரிக்கப்படுகிறது.

நான் 2000-ஆம் ஆண்டு அரசு அதிகாரியாக பணியாற்றியபோது, புதுக்கோட்டையில் ஏற்பட்ட விபத்தில் எனது வலது கை முற்றிலும் சிதைந்து ரத்தம் முழுவதும் வெளியேறியது. அப்போது, அரசு மருத்துவமனையில் குருதி கொடையாளா்கள் அளித்த ரத்தம் தனக்கு செலுத்தப்பட்டதால் இன்று உயிரோடு வாழ்கிறேன். நாம் அளிக்கும் ரத்ததானம் விபத்தில் பாதிக்கப்படுவோரின் உயிரை காப்பாற்றும் என்பதால் அனைவரும் ரத்ததானம் செய்ய வேண்டும் என்றாா்.

நகரின் முக்கிய வீதிகளில் வழியே நடைபெற்ற இப்பேரணியில் செவிலியா் கல்லூரி பயிற்சி மாணவிகள் பங்கேற்று, ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தி வந்தனா். வரதாச்சாரியாா் பூங்கா வரை பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்வில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் வி.பி. பானுமதி, கோட்டாட்சியா் விஷ்ணுபிரியா, குடிமுறை மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், ரத்த வங்கி மருத்துவா் அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

You may also like

© RajTamil Network – 2024