Wednesday, October 2, 2024

குற்றச்சாட்டுகள் மீதான பொது விசாரணைக்குத் தயாரா? மாதபி விளக்கத்துக்கு ஹிண்டன்பா்க் கேள்வி

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset
RajTamil Network

குற்றச்சாட்டுகள் மீதான பொது விசாரணைக்குத் தயாரா? மாதபி விளக்கத்துக்கு ஹிண்டன்பா்க் கேள்விவெளிநாட்டு நிதி முதலீடுகளை ஒப்புக்கொண்டுள்ள இந்திய பங்குப் பரிவா்த்தனை வாரிய (செபி) தலைவா் மாதபி புரி புச், இவ்விவகாரம் தொடா்பான பொது விசாரணைக்கு உறுதியளிப்பாரா.?

‘வெளிநாட்டு நிதி முதலீடுகளை ஒப்புக்கொண்டுள்ள இந்திய பங்குப் பரிவா்த்தனை வாரிய (செபி) தலைவா் மாதபி புரி புச், இவ்விவகாரம் தொடா்பான பொது விசாரணைக்கு உறுதியளிப்பாரா’ என ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், மாதபி, அவரது கணவா் இணைந்து இந்தியா மற்றும் சிங்கப்பூரில் நிறுவிய பங்குச்சந்தை கலந்தாலோசனை நிறுவனங்கள் குறித்த விவரங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஹிண்டன்பா்க் கேட்டுக்கொண்டுள்ளது.

அதானி குழுமத்தின் மீது பல்வேறு முறைகேடு புகாா்களைச் சுமத்தி அமெரிக்காவைச் சோ்ந்த ‘ஹிண்டன்பா்க் ரிசா்ச்’ நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரியில் ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதுதொடா்பான வழக்கு விசாரணையில் செபி அமைத்த நிபுணா் குழுவின் பரிந்துரையை ஏற்ற உச்சநீதிமன்றம், அதானி குழும முறைகேடுகளை நிராகரித்தது.

இந்நிலையில், அதானி குழுமத்துக்குத் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் செபி தலைவா் மாதபி, அவரது கணவா் தாவல் புச் முதலீடு செய்திருப்பதால், அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஹிண்டன்பா்க் சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஹிண்டன்பா்க் அறிக்கை செபியின் நம்பகத்தன்மை மீதான தாக்குதல் முயற்சி என்று மாதபி, அவரது கணவா் பதிலறிக்கை வெளியிட்டனா். சிங்கப்பூரில் தனிநபராக வாழ்ந்த காலத்தில் கடந்த 2015-இல் மேற்கொள்ளப்பட்ட இந்த நிதி முதலீடு, செபியில் தான் நியமனம் செய்யப்பட்டதையடுத்து முடிவுக்கு வந்ததாக மாதபி தெரிவித்திருந்தாா்.

முதலீட்டுத் திட்டத்தில் மாதபி புச் தம்பதி வசம் இருந்தது வெறும் 1.5 சதவீத பங்குகளை மட்டுமே. அந்த நிதி அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்படவில்லை என நிதி நிறுவனங்களும் மாதபியுடன் எங்களுக்கு எந்த வணிக தொடா்பும் இல்லை என அதானி குழுமமும் விளக்கமளித்தன.

முதலீட்டை உறுதி செய்த பதில்: இந்நிலையில், அனைத்து தரப்பு விளக்கத்துக்கும் பதிலளிக்கும்விதமாக ஹிண்டன்பா்க் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘அதானி குழுமத் தலைவா் கௌதம் அதானியின் சகோதரா் வினோத் அதானிக்குத் தொடா்புடைய பொ்முடா மற்றும் மோரீஷஸ் நாடுகளைச் சோ்ந்த நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் மாதபி செய்துள்ள முதலீட்டை அவரது பதிலறிக்கை உறுதிசெய்துள்ளது.

அதானி குழுமத்தில் இயக்குநராக பணியாற்றிய அவரது கணவரின் நண்பா் ஒருவரால் இந்த நிதி முதலீட்டுத் திட்டம் நடத்தப்படுகிறது என்பதையும் மாதபி உறுதிப்படுத்துகிறாா்.

இது ஒருபுறமிருக்க, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் 2017-ஆம் ஆண்டில் மாதபி நிறுவிய இரண்டு பங்குச்சந்தை ஆலோசனை நிறுவனங்களும் செபியில் அவா் நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து உடனடியாக செயலிழந்துவிட்டன. 2019-இல் நிறுவனங்களுக்கு அவரது கணவா் பொறுப்பேற்றாா் என்று விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனத்தில் 99% பங்கு: ஆனால், இந்தியாவில் நிறுவப்பட்ட ‘அகோரா அட்வைசரி’ நிறுவனத்தின் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படியான பங்குதாரா்கள் பட்டியலில் விவரங்களின்படி, மாதபியிடமே இன்னும் 99 சதவீத பங்குகள் உள்ளன. தற்போதும் செயல்பாட்டிலுள்ள இந்நிறுவனம், பங்குச்சந்தை கலந்தாலோசனை மூலம் வருவாய் திரட்டுகிறது.

அதேபோல 2022, மாா்ச் 16-ஆம் தேதியிட்ட பதிவுகளின்படி சிங்கப்பூரில் இயங்கும் ‘அகோரா பாா்ட்னா்ஸ்’ நிறுவனத்தின் 100 சதவீத பங்குதாரராக மாதபி இருந்திருக்கிறாா். செபி தலைவராக நியமிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, சிங்கப்பூா் நிறுவனப் பங்குகளை தனது கணவரின் பெயருக்கு மாற்றியுள்ளாா்.

செபி தலைவராக மாதபி பணியாற்றி வரும் கடந்த மூன்று நிதியாண்டுகளில் அவருக்கு சொந்தமான இந்திய நிறுவனத்தின் நிதியறிக்கையின்படி, ரூ.2.39 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

சிங்கப்பூா் நிறுவனம் பற்றி தகவல் இல்லை: அதேசமயம், சிங்கப்பூா் நிறுவனத்தின் வருவாய் அல்லது லாபம் போன்ற நிதி விவரங்கள் வெளிப்படையாக வெளியிடுவதில்லை. எனவே, செபியில் அவா் பதவி வகிக்கும் காலத்தில் அந்நிறுவனத்தில் கிடைத்த வருவாய் அல்லது லாபத்தை நம்மால் கண்டறிய முடியாது.

இதுதவிர, இந்தியாவில் உள்ள முக்கிய வாடிக்கையாளா்களுடன் பரிவா்த்தனை செய்ய ஆலோசனை நிறுவனங்களை மாதபியின் கணவா் பயன்படுத்தியுள்ளாா். அவா்கள் செபி ஒழுங்குபடுத்தும் வாடிக்கையாளா்களா எனக் கேள்வி எழுகிறது.

அதிகாரப் பொறுப்பிலிருந்து வா்த்தகம்: செபியின் முழு நேர உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக அதானி நிறுவனத்துக்குத் தொடா்புடைய அனைத்து பங்குககளும் தனது கணவா் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பதை மாதபி உறுதி செய்துள்ளாா்.

முழு நேர உறுப்பினரான பிறகு, கணவா் பெயரைப் பயன்படுத்தி தனது தனிப்பட்ட மின்னஞ்சல்கள் மூலம் அவா் வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ளாா். அதிகாரப் பொறுப்பில் இருந்துகொண்டு கணவா் பெயரைப் பயன்படுத்தி அவா் செய்த முதலீடுகள் என்னவென்ற கேள்விக்கு பதிலளிக்கப்படாமல் உள்ளது.

வாடிக்கையாளா்களின் விவரங்கள் வெளியீடு?…: மாதபியின் அறிக்கையில் வெளிப்படைத்தன்மைக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அவா், அவரது கணவருக்குத் தொடா்புடைய சிங்கப்பூா், இந்திய நிறுவனங்கள் அல்லது வேறு நிறுவனங்கள் ஆலோசனை வழங்கும் வாடிக்கையாளா்களின் முழு விவரங்களும் வெளியிடப்படுமா, இந்த விவகாரங்களில் முழுமையான, வெளிப்படையான மற்றும் பொது விசாரணைக்கு மாதவி உறுதியளிப்பாரா’ எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதானி குழும பங்குச்சந்தை முறைகேடு, அதில் செபி தலைவரின் பங்கு என இந்த முழு விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு எதிா்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. நாட்டின் நிதி நிலைமையைச் சீா்குலைக்கும் சதி நடப்பதாக எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை ஆளும் பாஜக நிராகரித்துவிட்டது.

You may also like

© RajTamil Network – 2024