குற்றச்சாட்டுக்குள்ளான திண்டுக்கல் நிறுவனத்திடமிருந்து தமிழகத்தின் எந்த கோயிலுக்கும் நெய் வாங்கக்கூடாது: ஹெச்.ராஜா

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

குற்றச்சாட்டுக்குள்ளான திண்டுக்கல் நிறுவனத்திடமிருந்து தமிழகத்தின் எந்த கோயிலுக்கும் நெய் வாங்கக்கூடாது: ஹெச்.ராஜா

சென்னை: குற்றச்சாட்டுக்குள்ளான திண்டுக்கல் நிறுவனத்திடம் இருந்து தமிழகத்தின் எந்த கோயிலுக்கும் நெய் வாங்கக்கூடாது என ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "திருப்பதி கோயில் லட்டு பிரசாதம் செய்ய பயன்படுத்துகிற நெய்யில் மிருகக் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளது. இந்த நெய்யை திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது. அதே நிறுவனம் தான் பழனிக்கும் நெய் சப்ளை செய்கிறது.

எனவே, இந்த குற்றச்சாட்டில் இருந்து அந்நிறுவனம் விடுதலையாகும் வரை தமிழகத்தில் எந்த கோயிலுக்கும் அந்நிறுவனத்தில் இருந்து நெய் வாங்க கூடாது. மேலும், அந்நிறுவனத்தின் உரிமையாளர் பழனி கோயிலின் தக்காராக உள்ளார். எனவே, அவர் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். இதை கேட்டால் பாஜவினர் மீது வழக்குப்பதிவு செய்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

அதேபோல், கடந்த ஆண்டே ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில், இந்த ஆண்டும் நீதிமன்றத்தின் அனுமதி வாங்க வேண்டும் என, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருப்பது கண்டனத்துக்குறியது. இந்து சமய அறநிலையத்துறை இந்து கோயில்களின் பணத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறது. பழனியில் நல்ல நிலையில் இருக்கும் சுற்றுச்சுவரை இடித்து பல கோடி ருபாய்க்கு மீண்டும் சுவர் கட்டுகிறார்கள். ஆனால், அது பலவீனமான கட்டுமானமாக இருக்கிறது.

கோயில் பணத்தை வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக நன்றாக இருக்கும் சுற்றுச்சுவரை இடித்து கட்டும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. சென்னையில் மயிலாப்பூர் கோயில் பணத்தில் ஹோட்டல் கட்டினார்கள். ஆனால், அந்த ஹோட்டல் கட்டுமானம் பலவீனமானது என இடித்துவிட்டார்கள். அதற்கு செலவு செய்த பணத்தை யார் கொடுப்பார்கள்? இந்துக்களின் பணத்தை நாசம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை யார்? தனியார் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், அதன் மீது தமிழக அரசு அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்கள் தான் நிர்வகிக்க முடியும் என 2014-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அன்று முதல் சிதம்பரம் கோயில் குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இந்த கோயிலுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு ஆண்டுக்கு ரூ.90 ஆயிரத்துக்கு மட்டுமே வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.

ஒரு ஏக்கர் ரூ.90-க்கு ஒத்திகைக்கு கிடைக்குமா என அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறைக்கும், அந்த கோயிலுக்கும் சம்பந்தம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், ஒவ்வொரு ஆண்டும், திமுகவினரும், திக.வினரும் தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் போது பிரச்சினை செய்கிறார்கள்.

அர்ச்சனை கட்டணம், அபிஷேக கட்டணம், ஏன் உண்டியல் கூட இல்லாமல், சிறப்பாக செயல்பட்டு வரும் சிதம்பரம் நடராஜர் கோயிலிலுக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை அவதூறு பரப்புவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை இந்து சமுதாயம் இனியும் வேடிக்கை பார்க்காது. பிரதமரை வெட்டுவேன் என சர்ச்சை குறிய வகையில் பேசிய தா.மோ.அன்பரசனை கைது செய்யாமல், சட்டவிரோத ஆட்சியை நடத்திக் கொண்டிரும் திமுக அரசு, ஒரு பாஜகவினர் மீது கூட வழக்குப்பதிவு செய்ய கூடாது.

பிரதமரை வெட்டுவேன் என பேசியவர் அமைச்சராக இருக்கலாமா? இந்திய இறையாண்மைக்கு விரோதமாக தமிழக முதல்வர் செயல்படுகிறார். ‘பேய்கள் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்’ என்பது போன்ற ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. டாஸ்மாக் மற்றும் இந்து கோயில்களின் வருமானத்தால் தான் திமுக அரசு ஓடிக்கொண்டிருக்கிறது.

2 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் இன்னும் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. இதனை மீட்க இந்து சமய அறநிலையத்துறை என்ன செய்திருக்கிறது? இந்து கோயில் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கும், அழிப்பதற்கும் ஒரு அரசாங்கமா?" என்று கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024