Saturday, September 21, 2024

குவைத் தீ விபத்தில் பலியான 45 இந்தியர்கள் உடலுடன் கொச்சி புறப்பட்டது விமானம்

by rajtamil
0 comment 34 views
A+A-
Reset

புதுடெல்லி,

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கின்றனர். குவைத்தில் இயங்கி வரும் பிரபலமான என்.பி.டி.சி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 7 மாடிகளை கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 196 பேர் தங்கியிருந்தனர். பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தவர்கள் நேற்று முன்தினம் அதிகாலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய இந்த தீ அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவியது. இதில் ஏற்பட்ட கரும்புகை அந்த கட்டிடம் முழுவதும் சூழ்ந்து கொண்டது.இந்த கொடூர சம்பவத்தில் உடல் கருகியும், மூச்சுத்திணறியும் பல தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் உயிர் தப்புவதற்காக மாடிகளில் இருந்து கீழே குதித்தபோது படுகாயமடைந்து உயிர்விட்டனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கே மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். கட்டிடத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தவர்களை மீட்ட அவர்கள், காயமடைந்து உயிருக்குப்போராடியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.இந்த துயர சம்பவத்தில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்து, அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அவற்றை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகளை குவைத் அதிகாரிகள் மேற்கொண்டனர். இதில் உயிரிழந்தவர்களில் 45 பேர் இந்தியர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது. மரபணு பரிசோதனை மூலம் இதை உறுதி செய்துள்ள அதிகாரிகள், அவற்றை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை தீவிரப்படுத்தினர்.

இதில் கேரளாவை சேர்ந்த 24 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குவைத் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதேபோல் இந்த தீ விபத்தில் தமிழர்கள் 7 பேர் இறந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர விமானப்படைக்கு சொந்தமான விமானம் நேற்று குவைத் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில், விமானப்படைக்கு சொந்தமான சி 130 என்ற அந்த விமானம் பலியான இந்தியர்களின் உடல்களை எடுத்துக் கொண்டு கொச்சி புறப்பட்டுள்ளது. கொச்சி விமான நிலையத்தில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

You may also like

© RajTamil Network – 2024