கூடலூரில் விஷம் வைத்து 2 புலிகள் கொல்லப்பட்ட விவகாரம்: மூவரை கைது செய்தது வனத்துறை

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

கூடலூரில் விஷம் வைத்து 2 புலிகள் கொல்லப்பட்ட விவகாரம்: மூவரை கைது செய்தது வனத்துறை

கூடலூர்: கூடலூர் சசக்ஸ் பகுதியில் விஷம் வைத்து இரண்டு புலிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பிதர்காடு பகுதியில் உள்ள சசக்ஸ் என்ற இடத்தில் கடந்த 20-ம் தேதி தனியார் தோட்டத்தில் புலி குட்டி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. பிதர்காடு சரகர் ரவி மற்றும் கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது 4 வயதுடைய ஆண் புலி ஒன்று அங்கு இறந்து கிடந்தது. அந்தப் பகுதியைச் சுற்றி வனத்துறையினர் ஆய்வு செய்தபோது புலிக் குட்டி இறந்த இடத்திலிருந்து 75 மீட்டர் தூரத்தில் எட்டு வயது பெண் புலி ஒன்றும் இறந்து கிடந்தது.

இரண்டு புலிகள் இறந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஒரு காட்டுப்பன்றி இறந்து கிடந்ததை விசாரணை குழு கண்டறிந்தது. இறந்த காட்டுப்பன்றியின் உடல் அருகில் இரண்டு புலிகளின் கால் தடங்கள் இருப்பதும் காணப்பட்டது. அதை இறந்த இரு புலிகளின் கால் தடங்களை வைத்து சரி பார்த்ததில் அவை ஒன்று போல் இருந்தது.

மேலும், காட்டுப்பன்றியின் உடலில் முக்கால்வாசியை புலிகள் சாப்பிட்டதாக தெரியவந்தது. இரண்டு புலிகளின் உடலிலும் காயங்களும் இருந்தன. இதையடுத்து, முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் இரண்டு புலிகளின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்து உடல் உறுப்புகளை ரசாயன பரிசோதனைக்காக சேகரித்தார்.

புலிகளின் வயிற்றுக்குள் காட்டுப்பன்றியின் மாமிசம் இருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. மேலும், இரண்டு புலிகளின் உள் உறுப்புகளை சோதித்ததில் அவை விஷத்தினால் இறந்திருக்க கூடும் என தெரியவந்தது. காட்டுப்பன்றி ஏதாவது விஷம் கலந்த உணவைச் சாப்பிட்டு அந்த காட்டுப்பன்றியை புலிகள் அடித்து சாப்பிட்டதால் புலிகள் இறந்திருக்கலாம் என்று முதலில் ஊகிக்கப்பட்டது.

இது தொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கலை இயக்குநர். டி.வெங்கடேஷ். கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையிலான வனத்துறையினர் பிதர்காடு சசக்ஸ் தோட்டத்தில் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், புலிகள் கொலையில் தொடர்புடைய நபர்கள் முதுமலை கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் ராஜேஷ்குமாரின் தொழில்நுட்ப உதவியுடன் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு கூறியதாவது: இரண்டு புலிகள் மற்றும் காட்டுப்பன்றிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட நச்சுயியல் ஆய்வறிக்கையில், கார்போஃப்யூரான் மற்றும் குளோர்பைரிபாஸ் விஷத்தால் புலிகள் இறந்திருப்பதாக தெரியவந்தது. காட்டுப்பன்றியின் குடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் நச்சு ரசாயனங்கள் எதுவும் இல்லை. ஆனால், தோல் திசுக்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் அதிக அளவு கார்போஃப்யூரான் மற்றும் குளோர்பைரிஃபோஸ் இருப்பதும் தெரியவந்தது.

பிரேதப் பரிசோதனையில், இரண்டு புலிகளின் குடலில் காட்டுப்பன்றி இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நச்சுயியல் அறிக்கை மற்றும் பிரேதப் பரிசோதனையில், புலியைக் கொல்ல காட்டுப்பன்றியை விஷம் கொடுத்துக் கொன்று அதன் இறைச்சியை புலிகளுக்கு வைத்ததில் அதை உண்டு அவை இறந்ததாகவும் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், குற்றம் நடந்த சசக்ஸ் எஸ்டேட்டில் விசாரணையின் போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களின் மொபைல் போன்களில், நீக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மீட்கப்பட்டன. அதில், இறந்த காட்டுப்பன்றியின் படங்கள் இருந்தன. மேலும், அவர்களின் தொலைபேசிகளில் இருந்து அவர்கள் கடந்த காலங்களில் காட்டுப்பன்றி கொலையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

சூர்யநாத் பராக் (35), அமங்கோயலா (24), சுரேஷ் நன்வார்(25), ஆகிய மூவரும் புலிகளை தோல், நகம் மற்றும் பற்களுக்காக கொல்லும் நோக்கத்துடன், 3% கிரானுலேட்டட் கார்போஃபுரான் கொண்ட ஃபுராடன் 3ஜி என்ற மருந்தை காட்டுப்பன்றிக்கு விஷமாகக் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தனர். இவர்களது செல்போன்கள் சாட்சியங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டு மூவரிடமும் வாக்குமூலமும் பெறப்பட்டு மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அந்த மூவரும் கூடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

You may also like

© RajTamil Network – 2024