கூட்டணிகளை விழுங்கும் கட்சி காங்கிரஸ்: மோடி

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

கூட்டணி கட்சிகளை விழுங்கும் கட்சி காங்கிரஸ் என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.

ஜம்மு – காஷ்மீர், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

இதில், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இக்கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில் வென்றது. இதன் மூலம், ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது.

ஹரியாணா தொகுதியில் 48 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தலைவர்கள் தொண்டர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிக்க | ஹரியாணாவில் பாஜகவுக்கு ஹாட்ரிக் வெற்றி! காங்கிரஸின் தோல்விக்கு காரணம்?

இதில் உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விஷத்தை பரப்புகிறது காங்கிரஸ்

தொண்டர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,

மக்கள் வளர்ச்சிக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பாஜக வேலை செய்கிறது. ஹரியாணாவிலும் நாம் அதையே செய்தோம். அதனால் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

இதற்காக ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனிக்கும் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஹரியாணாவின் வளர்ச்சிக்காக அவர்கள் அதிகம் உழைத்துள்ளனர்.

பொதுமுடக்கம் மற்றும் தீவிரவாதத்தில் இருந்து ஜம்மு – காஷ்மீர் வெளியேவரும். சுதந்திரம் கிடைத்த 1947ஆம் ஆண்டிலிருந்து முதல்முறையாக ஜம்மு – காஷ்மீரில் தொகுதி மேம்பாட்டு கவுன்சில் தேர்தலை நமது அரசு நடத்தியது. ஜம்மு – காஷ்மீரில் அரசியலமைப்பின் மீதான நம்பிக்கையை நிறுவியுள்ளோம், இது அம்பேத்கருக்குச் செய்யும் மிகப்பெரிய மரியாதை.

நான் எப்போதும் சொல்வதைப்போல, வளர்ந்த இந்தியாவுக்கு விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழைகள்தான் நான்கு தூண்கள். ஹரியாணாவோ, ஜம்மு – காஷ்மீரோ இந்த நான்கு தூண்களிலும் கவனம் செலுத்தி வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவோம்.

இதையும் படிக்க | ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி: பயங்கரவாத முகம் மாறுமா? கடந்து வந்தப் பாதை!

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதற்கு காரணம் அதன் கூட்டணி கட்சிகள். காங்கிரஸ் மீது வைத்த நம்பிக்கையால் கூட்டணிக் கட்சிகள் பாதிப்படைந்தன. கூட்டணி கட்சிகளை விழுங்கும் கட்சி காங்கிரஸ். மக்கள் தங்கள் சொந்த கலாசாரத்தையே வெறுக்கும் நாட்டை உருவாக்க காங்கிரஸ் விரும்புகிறது.

பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மீது காங்கிரஸ் பல கொடுமைகளைச் செய்துள்ளது. சாதியின் பெயரில் நாட்டில் நஞ்சைப் பரப்புகிறது. பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்கள், ஏழைகளை தங்களுக்குள்ளாகவே எதிரிகளாக்குகிறார்கள். பட்டியலின அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவர் இந்தியாவின் பிரதமராக வருவதை காங்கிரஸ் குடும்பம் ஒருபோதும் அனுமதிக்காது என மோடி பேசினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024