Tuesday, September 24, 2024

கேரளாவில் கனமழை; 8 மாவட்டங்களில் கல்வி மையங்களுக்கு இன்று விடுமுறை

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

திருவனந்தபுரம்,

கேரளாவில் பருவமழையை முன்னிட்டு பரவலாக பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால், கோழிக்கோடு மற்றும் கண்ணூரில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. எனினும், நாளை எந்த மாவட்டத்திற்கும் சிவப்பு எச்சரிக்கை விடப்படவில்லை.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

இதனை முன்னிட்டு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி மையங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, பள்ளிகள், அங்கன்வாடிகள், கல்வி பயிற்சி மையங்கள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. எனினும், முன்பே திட்டமிடப்பட்ட தேர்வுகளில் எந்தவித மாற்றங்களும் இருக்காது என மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

கனமழையை தொடர்ந்து, கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு ஆகிய கடலோர பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024