Wednesday, November 6, 2024

கொட்டி தீர்க்கும் கனமழை: ஆந்திராவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

அமராவதி,

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

கொட்டி தீர்க்கும் கனமழையால் மாநிலத்தின் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்கள். மழை வெள்ளத்தில் சிக்கி சுமார் 4½ லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். மீட்கப்பட்டவர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கனமழையால் 136 கால்நடைகள் இறந்துள்ளதாகவும், 1,721542 ஹெக்டர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் 5 ஹெலிகாப்டர்கள், 188 படகுகள், 283 நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 176 நிவாரண முகாம்களில் 41,927 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ளச்சேதத்தை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆந்திர அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024