ரசிகரை கொலை செய்த வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர் தனது ரசிகரான சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் காமாட்சிபாளையா போலீசாரால் கைது செய்யப்பட்டு பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே தர்ஷன் ஜாமீன் கேட்டு கோரி பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமீன் கோரில் தர்ஷன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 22-ந்தேதி இந்த மனு விசாரணைக்கு ஏற்று கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதி விசாரணையை 28-ந்தேதிக்கு (நேற்று முன்தினம்) ஒத்திவைத்தார். அதன்படி நேற்று முன்தினம் இந்த மனு நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தர்ஷன் தரப்பில் மூத்த வக்கீல் சி.பி.நாகேஷ் ஆஜராகினார். அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வழக்கும்படி கூறினார். அதை ஏற்ற நீதிபதி அரசு தரப்பு வக்கீல் ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வழங்கியதுடன், 29-ந்தேதிக்கு (அதாவது நேற்று) விசாரணையை ஒத்திவைத்தார்.
அதன்படி நேற்று தர்ஷன் ஜாமீன் மனு மீதான விவாதம் நடந்தது. அப்போது மூத்த வக்கீல் சி.பி.நாகேஷ், மனுதாரர் தர்ஷனுக்கு முதுகு தண்டு வடத்தில் பாதிப்பு உள்ளது. சிகிச்சை பெறவில்லை என்றால் சிறுநீரகம் வரை பாதிக்க வாய்ப்பு உள்ளது. உடனே அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அவர் மைசூரு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புகிறார். சாட்சிகளை அளிக்க முயற்சிக்க மாட்டார். எனவே அவருக்கு இடைக்கால ஜாமீன் வழக்கும்படி கூறினார்.
இதற்கு அரசு தரப்பு வக்கீல் ஆட்சேபனை தெரிவித்தார். தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினால், அவர் சாட்சிகளை அளிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இடைக்கால ஜாமீன் வழங்கக்கூடாது என்று கூறினார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைக்கு (புதன் கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகர் தர்ஷன் தரப்பு கோரிக்கையை ஏற்றி 6 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.