Saturday, October 12, 2024

கொலை வழக்கு; சான்றுகளை எலி அழித்து விட்டது… போலீசாரை கடுமையாக சாடிய ஐகோர்ட்டு

by rajtamil
Published: Updated: 0 comment 1 views
A+A-
Reset

இந்தூர்,

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரை சேர்ந்தவர் அன்சார் அகமது. இவருடைய மனைவி தஹிரா பி. 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் இந்த தம்பதிக்கு இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. இதில், தஹிராவுக்கு கை, தலை உள்பட பல்வேறு பகுதிகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

அவர் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதுபற்றி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜாமீன் வழங்க கோரி மத்திய பிரதேச ஐகோர்ட்டில் அன்சார் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுபற்றிய விசாரணை வந்தபோது, துணை காவல் ஆணையாளர் அபினய் விஸ்வகர்மா மற்றும் விஜய்நகர் காவல் நிலைய அதிகாரி சந்திரகாந்த் பட்டேல் ஆகியோர் ஐகோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள். அப்போது, இந்த வழக்கில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த சான்றுகள் அழிந்து விட்டன என தெரிய வந்து நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி கோர்ட்டில் அதிகாரி அபினய் கூறும்போது, பிளாஸ்டிக் கேன்களில் இந்த வழக்கின் சான்றுகள் வைக்கப்பட்டு இருந்ன. குளிர்காலத்தின்போது, எலிகள் அவற்றை அழித்து விட்டன. இதனால், அதனுடன் தொடர்புடைய வேறு 28 மாதிரிகளையும் இனி பயன்படுத்த முடியாது என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.

இதனை கேட்ட நீதிபதி சுபோத் அபியாங்கர், வழக்கின் சான்றுகளை பாதுகாப்பாக வைக்காததற்காக கடுமையாக சாடினார். இதனை தொடர்ந்து, இதுபோன்ற சம்பவம் இனி வருங்காலங்களில் நடைபெறாத வகையில், காவல் நிலையங்களில் உள்ள அனைத்து சேமிப்பு பகுதிகளையும் ஆய்வு செய்யும்படி, மத்திய பிரதேச காவல் துறை தலைவருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

இந்த விவகாரத்தில், காவல் நிலைய அதிகாரியிடமும், சேமிப்பு பகுதி பொறுப்பு அதிகாரியிடமும் துறை சார்ந்த விசாரணை நடத்தப்படும் என்று கோர்ட்டில், காவல் உயரதிகாரி அபினய் உறுதி அளித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024