கொல்கத்தாவில் தொடரும் போராட்டம்: மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதிய மம்தா பானர்ஜி

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டர் கடந்த 9-ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெண் டாக்டர் படுகொலைக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஜூனியர் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகளுக்கு கடுமையான சட்டம் வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு பதில் இல்லாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு இன்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தை அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் உங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. என்றாலும், மத்திய அரசின் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு மந்திரியிடமிருந்து பதில் வந்தது. எனது கடிதத்தில் கூறப்பட்டிருந்த பிரச்சினையின் தீவிரத்தை அவர் கவனிக்கவில்லை.

அதுபோன்ற பொதுவானதொரு பதிலில், விஷயத்தின் தீவிரத் தன்மை மற்றும் சமூகத்தில் அதன் தொடர்பு குறித்து போதுமான கவனம் கொடுக்கப்படவில்லை என நான் கருதுகிறேன்.

முன்னதாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை மந்திரி, மம்தா பானர்ஜிக்கு எழுதியிருந்த கடிதத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த தவறிய மாநில அரசின் தோல்வியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மேற்கு வங்காள முதல்-மந்திரி, 10 போக்சோ நீதிமன்றங்கள் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை தவிர மாநிலம் முழுவதும் 88 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் 62 போக்சோ நீதிமன்றங்கள் மாநில அரசின் நிதியில் செயல்படுகின்றன. வழக்குகள் கண்காணிப்பது தீர்த்து வைப்பது முழுக்க முழுக்க நீதிமன்றங்களின் கைகளிலேயே உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின் படி ஓய்வு பெற்ற நீதித்துறை அதிகாரிகள் மட்டுமே விரைவு சிறப்பு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்க வேண்டும். இதனிடையே, வழக்குகளின் தீவிரம் காரணமாக நிரந்தர நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. மத்திய அரசு இந்த விவகாரத்தை பரிசீலிக்க வேண்டும். உங்களின் தலையீடு அவசியம்.

அவசரகால உதவி எண்களைப் பொறுத்தவரை, மாநிலம் முழுவதும் உதவி எண்கள் 112 மற்றும் 1098 திருப்திகரமாக செயல்படுகிறது. கூடுதலாக அவசரகால சூழ்நிலைகளில் 100 என்ற எண் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகளுக்கு கடுமையான சட்டம் வேண்டும், மற்றும் விசாரணை அதிகாரிகளால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்குகளை தீர்ப்பதற்கான கட்டாய ஏற்பாடுகளை பரிசீலிக்குமாறு நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்."என்று அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

Namakkal police have been arrested Kerala ATM robbers and one killed in police encounter.

Skoda Teases Elroq Electric SUV; Set For Global Debut On October 1

கெத்து தினேஷ்..! பிரபலங்கள் வாழ்த்து மழையில் நடிகர் தினேஷ்!