Friday, September 20, 2024

கொல்கத்தா காவல் ஆணையாளர் உள்பட முக்கிய அதிகாரிகளை நீக்குக: டாக்டர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த மாதம் 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், மருத்துவர்களின் பொதுக்குழு கூட்டத்தின்போது, அதில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி, பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை விவகாரத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும். அவர்களுக்கு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் வகையிலான தண்டனை வழங்கப்பட வேண்டும். கொல்கத்தா காவல் ஆணையாளர் கோயல், அவருடைய பதவியில் இருந்து விலக வேண்டும் உள்ளிட்டவை தீர்மானங்களில் கூறப்பட்டு இருந்தன.

இதேபோன்று, சுகாதார துறையின் முதன்மை செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகாம் மற்றும் அவருடைய 2 உதவி அலுவலர்கள் ஆகியோர் பதவி விலக வேண்டும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன் வைத்தனர்.

ஆனால் அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாத சூழலில் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், மேற்கு வங்காள இளநிலை டாக்டர்கள் அமைப்பு மற்றும் பயிற்சி டாக்டர்களின் கூட்டமைப்பு இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தியது. அப்போது அவர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அதில், கொல்கத்தா காவல் ஆணையாளர் வினீத் கோயல் மற்றும் மம்தா பானர்ஜி அரசில் உள்ள சுகாதார மற்றும் குடும்பநல துறையில் உள்ள அனைத்து மூத்த அதிகாரிகளையும் நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. 5 தீர்மானங்களையும் முக்கிய கோரிக்கைகளாக அவர்கள் குறிப்பிட்டனர்.

குற்ற சம்பவம் நடந்த பகுதியில் உடனடியாக கட்டுமான பணி நடைபெறும் உத்தரவில் கையெழுத்திட்ட உயரதிகாரிகளான மருத்துவ கல்வியின் இயக்குநர், சுகாதார சேவையின் இயக்குநர் மற்றும் மேற்கு வங்காள அரசின் சுகாதார மற்றும் குடும்பநல துறையின் சுகாதார செயலாளர் ஆகியோர் நீக்கப்பட வேண்டும். சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்ட விசயத்தில் நடந்த மிக பெரிய ஊழலில், அவர்களுக்கும் பொறுப்பு உள்ளது என நாங்கள் நினைக்கிறோம்.

சமீபத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் படுகொலை விவகாரத்தில் சந்தீப்பை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. அதனால், இந்த குற்ற சம்பவத்தில் அவருக்கு தீவிர தொடர்பு உள்ளது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டு உள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

அதனால், சம்பவம் நடந்த முதல் நாளில் இருந்து, மருத்துவ அதிகாரிகள் மற்றும் கொல்கத்தா போலீசார் அளவில் ஒரு தீவிர நிர்வாக செயலிழப்பை நாங்கள் பார்க்கிறோம்.

தொடக்கத்தில் இருந்து அனைத்து ஆவண சான்றுகளையும் அழிப்பதற்கும், உண்மையான குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான தீவிர நடைமுறை ஆரம்பத்தில் இருந்தே நடந்து வந்துள்ளது.

நிர்வாகத்தில் இருந்து தவறிய மற்றும் தடயங்களை அழிப்பதில் ஈடுபட்டதற்காக கொல்கத்தா காவல் ஆணையாளர் வினீத் கோயலை நீக்க வேண்டும். போதிய திறனை கொண்டிராத மற்றும் பாதிக்கப்பட்டவரின் பெற்றோருக்கு பணம் வழங்க முன் வந்த துணை காவல் ஆணையாளர் (வடக்கு) மற்றும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்திற்குரிய நபரின் அடையாளம் தெரியாமல் அதனை மறைக்க முயற்சித்ததற்காக துணை காவல் ஆணையாளர் (மத்திய) ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த வழக்கில், நம்முடைய மாநில போலீசார் மீது கொண்டிருந்த மொத்த நம்பிக்கையும் அற்றுப்போய் விட்டது என டாக்டர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

இளநிலை டாக்டர்கள் மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் முறையான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதாரநல மையங்களில் முறையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய அதிகாரிகள், சி.பி.ஐ. மற்றும் சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை விசாரணை நடைமுறையை விரைந்து மேற்கொண்டு காலதாமதமின்றி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024