Saturday, September 21, 2024

கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு குற்றவாளி உள்ளிட்ட 7 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு கடந்த 13-ந்தேதி உத்தரவிட்டது. இதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் 14-ந்தேதி முதல் விசாரணையை தொடங்கினர்.

இதனிடையே சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. கடந்த வியாழக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையின்போது, பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மூடி மறைப்பதற்கு உள்ளூர் போலீசார் முயற்சி செய்துள்ளனர் என்று சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய், மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்திப் கோஷ் மற்றும் சம்பவம் நடந்த தினத்தில் இரவுப் பணியில் இருந்த 4 டாக்டர்கள் உள்பட மொத்தம் 7 பேருக்கு இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இந்த சோதனை நடைபெறுகிறது.

You may also like

© RajTamil Network – 2024