கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் முதுகலை பெண் பயிற்சி டாக்டர், உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும், உண்மையை மறைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் உயிரிழந்த பெண் டாக்டரின் தந்தை குற்றம்சாட்டி இருந்தார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே இன்று நடந்த பிரேத பரிசோதனையில், பெண் டாக்டர் கொலை செய்யப்படுவதற்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொல்கத்தா போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த விவகாரத்தில் நாங்கள் மறைப்பதற்கு எதுவும் இல்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க கோர்ட்டில் முறையிடுவோம்.
அதே சமயம், போராட்டம் நடத்தும் மாணவர்கள் வேறு விசாரணை அமைப்புகள் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விரும்பினால், நாங்கள் அதை மறுக்க மாட்டோம். மறைப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை என்பதால், சி.பி.ஐ. விசாரணை நடத்தினாலும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் நிர்வாகத்தில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். மருத்துவமனை வளாகத்தில் சி.சி.டி.வி. மேகராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையிலும், இப்படி ஒரு சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்கள், தங்கள் போராட்டத்தால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.