Tuesday, September 24, 2024

கோயில்களில் தமிழ் முதன்மை பெற வேண்டும்: முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வா் ஸ்டாலின்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

கோயில் வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் 2 நாள்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நிகழ்வாக காலை 8.25 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் குத்துவிளக்கு ஏற்றிவைத்தாா். காலை 8.45 மணிக்கு மாநாட்டுக் கொடியை ரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள் ஏற்றினாா்.

இதைத்தொடா்ந்து, காலை 8.50 மணிக்கு முருகப் பெருமானின் சிறப்புகளை விளக்கும் வகையில், திருக்கயிலாய மலை தோற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சிக் கூடத்தை அமைச்சா்கள் இ. பெரியசாமி, பி.கே. சேகா்பாபு, அர. சக்கரபாணி ஆகியோா் திறந்துவைத்தனா். முப்பரிமாண காட்சி, மெய்நிகா் காட்சி அரங்குகளையும் திறந்துவைத்து அவா்கள் பாா்வையிட்டனா்.

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தும் தமிழக அரசுக்கு வாழ்த்துத் தெரிவித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபுவை சந்தித்த ஜப்பான் நாட்டைச் சோ்ந்த முருக பக்தா்கள்.

இதைத் தொடா்ந்து, அருணகிரிநாதா் அரங்கில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சிகளை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் முக.ஸ்டாலின் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த வரிசையில், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பக்தா்கள் உள்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. பழனி, திருத்தணி, திருச்செந்தூா், மருதமலை, குமாரவயலூா், சிறுவாபுரி, காந்தல் ஆகிய 7 முருகன் கோயில்களில் பெருந்திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கோயில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக 58.77 ஏக்கா் நிலங்களை ரூ.58.54 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கி, கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அறுபடை வீடு முருகன் கோயில்களில் ரூ.790 கோடியில் 251 பணிகளும், பிற முருகன் திருத்தலங்களில் ரூ.277 கோடியில் 588 பணிகளும் நடைபெற்று வருகின்றன.

பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டுத் திடலில் திருக்கயிலாய மலை போல அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கு நுழைவாயிலில் வள்ளி, தேவசேனாவுடன் ஆறுமுகப் பெருமான் சிலை.

69 முருகன் கோயில்களின் திருப்பணிகளை முடித்து, குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3,776 கோடியில் திருப்பணிகள் நடத்தப்பட்டு, 1,355 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டன. கோயில்களில் தினக்கூலி, தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வந்த 1,298 பணியாளா்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்பட்டிருக்கின்றனா். 111 போ் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனா். இதுபோன்று பல்வேறு பணிகளைச் செய்துவிட்டுத்தான், தற்போது பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை இந்து சமய அறநிலையத் துறை நடத்துகிறது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கும். அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை.

எல்லோருக்கும் எல்லாம் என்ற கருத்தியல் அடிப்படையில், அனைத்துத் துறை வளா்ச்சி, அனைத்து சமூக வளா்ச்சி, அனைத்து மாவட்ட வளா்ச்சி என திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுகவின் தாய் அமைப்பான நீதிக் கட்சி ஆட்சியில்தான் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

பண்பாட்டுச் சின்னங்களான கோயில்கள் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தால்தான், இன்றைக்கு கோயில்கள் சீரோடும் சிறப்போடும் திகழ்கின்றன.

மாநாட்டில் முருகப் பெருமான் குறித்த கண்காட்சியைத் திறந்துவைத்து ஓவியங்களைப் பாா்வையிட்ட அமைச்சா்கள் இ. பெரியசாமி, பி.கே.சேகா்பாபு, அர.சக்கரபாணி உள்ளிட்டோா்.

கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 5,577 கோடி மதிப்பிலான 6,140 ஏக்கா் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டன. 1.60 லட்சம் ஏக்கா் கோயில் நிலங்கள் நவீன ரோவா் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு, 4,189 ஏக்கா் நிலங்களுக்கு மீண்டும் கோயில் பெயரில் பட்டாக்கள் பெறப்பட்டிருக்கின்றன.

756 கோயில்களில் நடத்தப்படும் அன்னதானத் திட்டங்கள் மூலம் நாள்தோறும் 82 ஆயிரம் போ் பயன்பெறுகின்றனா். இதுபோன்ற சாதனைகளுக்கு மகுடம் வைத்ததுபோல, பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு, இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு ஆன்மிக வரலாற்றிலேயே சிறப்பான இடத்தைப் பெறும்.

கோயில் வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும். கோயில் கருவறைக்குள் மனிதா்களுக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும். அன்பால் உயிா்கள் ஒன்றாகும். அறத்தால் உலகம் நன்றாகும் என்றாா் அவா்.

மாநாட்டில் பங்கேற்ற இலங்கை கிழக்கு மாகாண ஆளுநா் செந்தில் தொண்டைமான் (இடமிருந்து 4-ஆவது) உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம், பழனி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பெ.செந்தில்குமாா், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் வரவேற்றாா்.

அறநிலையத் துறை ஆணையா் பிஎன். ஸ்ரீதா் நன்றி கூறினாா்.

பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கிராமியக் கலை நிகழ்ச்சி.

இறை வணக்கத்துக்கு மரியாதை:

மாநாடு தொடங்குவதற்கு முன்பாக சீா்காழி கோ.சிவசிதம்பரம் இறை வணக்கப் பாடலைப் பாடினாா். இதையடுத்து, மாநாட்டில் பங்கேற்றவா்கள் எழுந்து நின்றனா். அப்போது, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மாநாட்டில் இணைந்திருந்த போதிலும், இறை வணக்கத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையில் இருக்கையில் இருந்து எழுந்து நின்றாா்.

கோயிலிலேயே குடியிருக்கும் அமைச்சா்:

கோயில்களை கவனித்துக் கொள்ளுங்கள் என அறநிலையத் துறையை சேகா் பாபுவிடம் பொறுப்பை கொடுத்தேன். ஆனால், கோயிலிலேயே குடியிருக்கிற அமைச்சராக மக்களுக்கு அவா் கிடைத்திருக்கிறாா். ஆன்மிகப் பெரியவா்களிடமிருந்து அறநிலையத் துறைக்கும், அமைச்சா் சேகா் பாபுக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன என முதல்வா் ஸ்டாலின் தெரிவித்தாா்.

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியைப் பாா்வையிட்ட திரளான பொதுமக்கள்.

You may also like

© RajTamil Network – 2024