கோவாவில் அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி ஏமாற்றிய பல்வேறு வழக்குகளை சிபிஐ அல்லது ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மூலம் விசாரிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு கோவாவில் ஆம் ஆத்மி தலைவர் அமித் பலேகர் கூறுகையில்,
அரசுத் துறைகளில் ஆள்சேர்ப்பு செயல்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரினார். மத்திய புலனாய்வுத் துறை மூலம் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
சிபிஐ இல்லையென்றால் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
ஊழலில் உள் நபர்கள் விசாரிக்கப்பட வேண்டும், இது ஒரு பெரிய மோசடி முதல்வர் பிரமோத் சாவந்துக்கு நெருக்கமானவர்கள் உள்பட அனைத்து மூத்த அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
கோவா மாநிலத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட தொடர் வழக்குகளையடுத்து, சமீபத்தில் அம்பலமான அரசு வேலைகளுக்கான பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் ஆறு பேரை கோவா போலீஸார் இதுவரை கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் போலீஸாரால் விசாரிக்கப்பட்ட நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதன் மூலம் இந்த ஊழல் ஆழமாக வேரூன்றியிருப்பதை இது காட்டுகிறது என்று அவர் கூறினார்.
கடந்த மாதம் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதாக பூஜா நாயக் என்ற பெண்ணை கோவாவில் உள்ள போலீசார் கைது செய்தனர். வேலை மோசடியில் தனக்கு உதவியதற்காக இரண்டு அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாவந்த் கூறியிருந்தார்.
இதையடுத்து, மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் ரயில்வே வேலை வாங்கித் தருவதாகக்கூறி நபர் ஒருவரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ததற்காக கோவா போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவ்வாறு பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளது. இதற்கு சரியான விசாரணை எடுக்கவேண்டும் என்று ஆம் ஆத்மி வலியுறுத்தியுள்ளது.