Thursday, September 19, 2024

கோவில்பட்டி அருகே புனித பரலோகமாதா பேராலய பெருவிழா

by rajtamil
0 comment 27 views
A+A-
Reset

புனித பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி விமரிசையாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோகமாதா பேராலயம் 424 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் ஆகும். இங்குதான், தேன் சிந்தும் தேம்பாவணி என்ற ஒப்பற்ற காவியத்தை தமிழில் படைத்த வீரமாமுனிவர் 5-வது பங்குத் தந்தையாக பணியாற்றினார்.

இந்த திருத்தலத்தின் 339-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம் கடந்த 6-ந் தேதி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு 'மரியே வாழ்க மரியே வாழ்க' என்று கரகோஷம் எழுப்ப, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், சிறந்த தாய்மை முன்மாதிரி என்ற தலைப்பில் மறையுரை நடந்தது. முன்னதாக திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருச்சி மறைமாவட்டத்தின் ஆயர் ஆல்பர்ட், கல்லிடைக்குறிச்சி பங்குத் தந்தை அருள் அந்தோணி, அளவந்தான்குளம் பங்குத் தந்தை அந்தோணி வியாகப்பன் ஆகியோர் மறையுறை வழங்கினர். 10-ம் தேதி காலை மரியன்னை மாநாடு, 11-ம் தேதி காலை புதுநன்மை விழா நடைபெற்றது. நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று (15-ந் தேதி) அதிகாலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக தேரடித் திருப்பலி பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார அதிபர் சந்தனசகாயம், காலை 8 மணிக்கு துாத்துக்குடி மறைமாவட்டம் முதன்மை குரு ஜோசப் ரவி பாலன், முதன்மை செயலர் அந்தோணி ஜெகதீசன் ஆகியோர் திருப்பலி நடத்தினர். மேலும் கேரளா, மும்பை உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக மதியம் 12 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலியும், 2 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு இந்தியில் திருப்பலியும், இரவு 7 மணியளவில் திருப்பலி மற்றும் நற்கருணை பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

You may also like

© RajTamil Network – 2024