Monday, September 23, 2024

கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

கோவை மாநகராட்சி 29-வது வார்டு கவுன்சிலரான ரங்கநாயகி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

கோவை,

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சிக்கு கடந்த 2022-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி 96 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 3 இடங்களிலும், 1 இடத்தில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து 19-வார்டு தி.மு.க. கவுன்சிலரான கல்பனா ஆனந்தகுமார் மேயராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு கவுன்சிலர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் கல்பனா உடல்நிலை காரணமாக திடீரென தனது மேயர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார்.

இதனால் மாநகராட்சிக்கு புதிய மேயர் தேர்வு செய்யும் தேர்தல் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் அதிகாரியாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நியமிக்கப்பட்டார். மேயர் பதவியை கைப்பற்ற தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில் மேயர் தேர்வு தொடர்பாக தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் காளப்பட்டியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கவுன்சிலர்கள் கூட்டம் தொடங்கியதும் அமைச்சர் கே.என்.நேரு, தான் கொண்டு வந்திருந்த கடிதத்தை எடுத்து நிர்வாகிகள் முன்னிலையில் படித்தார்.

இதில் கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக 29-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ரங்கநாயகியை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கோவை மேயர் தேர்தலில் ரங்கநாயகி போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ரங்கநாயகி தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி அவர் தேர்வானார்.

இதன்படி கோவை மாநகராட்சி 29-வது வார்டு கவுன்சிலரான ரங்கநாயகி மேயராக தேர்வு செய்யப்பட்டார். கோவை மேயரை தேர்வு செய்ய மறைமுகத்தேர்தல் இன்று நடக்க இருந்தநிலையில் ஒருமனதாக அவர் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024