Monday, September 23, 2024

சட்டவிரோதமாக குட்காவை பதுக்கி விற்ற வழக்கு: சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆஜர்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

சட்டவிரோதமாக குட்காவை பதுக்கி விற்ற வழக்கு: சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆஜர்

சென்னை: சட்டவிரோதமாக குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை உயரதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோர் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அனைவருக்கும் வழங்கும் வகையில் குற்றப்பத்திரிகை நகல் இன்னும் தயாராகவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், வழக்கு விசாரணை செப்.23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

தமிழகத்தில் குட்காவுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக் கும் லஞ்சம் கொடுத்து, சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்கப்பட்டது. இதுதொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல்: முதல்கட்டமாக குட்கா குடோன் உரிமையாளர்களான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதார துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேருக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

21 பேருக்கு எதிராக.. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், வணிக வரித் துறை இணை ஆணையராக இருந்த வி.எஸ்.குறிஞ்சிச்செல்வன், வணிக வரித் துறை செயலராக இருந்த எஸ்,கணேசன், சுகாதார துறை அதிகாரி லட்சுமி நாராயணன், காவல் துறை உதவி ஆணையராக இருந்த ஆர்.மன்னர் மன்னன், காவல் ஆய்வாளராக இருந்த வி.சம்பத், சென்னை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஏ.பழனி உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டு, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு, சென்னையில் எம்.பி. எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் 19-வது நபராக குற்றம்சாட்டப்பட் டுள்ள பி.முருகன் உயிரிழந்து விட்டதாக கூறி இறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், எஸ்.ஜார்ஜ் உள்ளிட்டோர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி.சஞ்சய் பாபா முன்பு ஆஜராகினர்.

அப்போது, சிபிஐ தரப்பில், அனைவருக்கும் வழங்கும் வகையில் குற்றப்பத்திரிகை நகல் இன்னும் தயாராகவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை செப்.23-ம் தேதிக்கு தள்ளிவைத்து உள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024