Sunday, October 27, 2024

சதம் விளாசிய சௌத் ஷகீல்; 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து தடுமாற்றம்!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (அக்டோபர் 24) ராவல்பிண்டியில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி, 267 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 119 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பென் டக்கெட் 52 ரன்களும், கஸ் அட்கின்சன் 39 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் சாஜித் கான் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நோமன் அலி 3 விக்கெட்டுகளையும், ஜாஹித் மஹ்முத் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: 2-வது டெஸ்ட்: 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் நியூசிலாந்து!

சதம் அடித்த சௌத் ஷகீல்

இங்கிலாந்து அணி 267 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷஃபீக் 14 ரன்களிலும், சைம் ஆயூப் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷான் மசூத் 26 ரன்களிலும், கம்ரான் குலாம் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சௌத் ஷகீல் ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து நிதானமாக விளையாடினார்.

முகமது ரிஸ்வான் சிறிது நேரம் தாக்குபிடித்தபோதிலும், 25 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, சௌத் ஷகீல் மற்றும் நோமன் அலி ஜோடி சேர்ந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் ஷகீல் சதமடித்து அசத்தினார். அவர் 223 பந்துகளில் 134 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். 134 ரன்களில் வெறும் 20 ரன்களை மட்டுமே அவர் பவுண்டரிகள் மூலம் எடுத்தார். 114 ரன்களை ஓடியே எடுத்தார்.

இதையும் படிக்க: வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலிருந்து டெம்பா பவுமா விலகல்!

பந்துவீச்சில் அசத்தி வரும் சுழற்பந்துவீச்சாளர்களான சாஜித் கான் மற்றும் நோமன் அலி இருவரும் பேட்டிங்கிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நோமன் அலி 84 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். சாஜித் கான் 48 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 344 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து தரப்பில் ரிஹான் அகமது 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளையும் மற்றும் ஜாக் லீச் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: ஓராண்டில் விரைவாக 1,000 ரன்கள்..! ஜெய்ஸ்வால் புதிய சாதனை!

தடுமாறும் இங்கிலாந்து

இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ஜோ ரூட் 5 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி பாகிஸ்தானைக் காட்டிலும் 53 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024