சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சதம் விளாசியது குறித்து மனம் திறந்துள்ளார்.

முதல் டெஸ்ட்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று (செப்டம்பர் 19) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் விளாசி அசத்தினார். அவர் 102 ரன்களுடன் களத்தில் உள்ளார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

கௌதம் கம்பீர் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார்: ராகுல் டிராவிட்

சதம் குறித்து மனம் திறந்த அஸ்வின்

முதல் இன்னிங்ஸில் சதம் விளாசியது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் போட்டி நிறைவடைந்த பிறகு பேசியுள்ளார்.

சதம் விளாசியது குறித்து அஸ்வின் பேசியதாவது: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெறும் ஆடுகளம் பழைய ஆடுகளம். அதில் பௌன்சர்கள் இருக்கும். சிவப்பு மண் ஆடுகளம் உங்களை சிறப்பான ஷாட்டுகளை விளையாட அனுமதிக்கும். ரிஷப் பந்த் போன்று அதிரடியாக விளையாடுபவர்களுக்கு இந்த ஆடுகளம் உகந்ததாக இருக்கும். ரிஷப் பந்த் மிக நன்றாக பேட் செய்தார்.

டிஎன்பிஎல் உதவியது

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடிய பிறகு, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறேன். டிஎன்பிஎல் தொடரில் எனது பேட்டிங்கில் கவனம் செலுத்தி விளையாடினேன். அது எனக்கு உதவியாக இருந்தது.

சேப்பாக்கம் மைதானம்

சொந்த ஊர் மக்கள் முன்பாக சிறப்பாக விளையாடுவது எப்போதும் சிறப்பான உணர்வைக் கொடுக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக விளையாடுவதை நான் எப்போதும் விரும்புகிறேன். இந்த மைதானம் எனக்கு எண்ணற்ற நினைவுகளை கொடுத்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா?

ஜடேஜா உதவினார்

பேட்டிங்கின்போது ஜடேஜா மிகுந்த உதவியாக இருந்தார். ஆட்டத்தின் ஒருகட்டத்தில் நான் சோர்வாக உணர்ந்தேன். அப்போது அதனை கவனித்த ஜடேஜா எனக்கு உதவியாக இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஜடேஜா வலம் வருகிறார். பேட்டிங்கின்போது, நான் சோர்வாக இருப்பதை அறிந்து இரண்டு ரன்களை மூன்று ரன்களாக மாற்ற நாம் முயற்சிக்க வேண்டாம் என அவர் கூறிய அறிவுரை எனக்கு உதவியாக இருந்தது.

களத்தில் அஸ்வின், ஜடேஜா

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்துள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின் 102 ரன்களுடனும் (10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) , ரவீந்திர ஜடேஜா 86 ரன்களுடனும் (10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) களத்தில் உள்ளனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024