Friday, September 20, 2024

சந்தியா தேவிக்கு சிறந்த திருநங்கை விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

சந்தியா தேவிக்கு சிறந்த திருநங்கை விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: இந்த ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருதை சந்தியா தேவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநங்கைகளின் நலனுக்காக சிறப்பான சேவை புரிந்து,முன்மாதிரியாகத் திகழும் திருநங்கை ஒருவர், சமூக நலத்துறை அமைச்சர் தலைமையிலான குழுவால் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ம் தேதி, சிறந்த திருநங்கை விருது கடந்த2021-ம் ஆண்டு முதல் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தேர்வாகும் திருநங்கைக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவி பூ கட்டும் தொழில் செய்து தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார். வில்லிசையில் ஆர்வம் ஏற்பட்டு புராணக் கதைகளை படித்து தன் தனித் திறமையால் 1000-க்கும்மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை தமிழகம் மற்றும் கேரளாவில் நடத்தியுள்ளார்.

வில்லிசை நிகழ்ச்சி மூலம் கரோனா விழிப்புணர்வு, சமூக நலத் திட்டங்கள், வரதட்சணை தடுப்பு, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பல திருநங்கைகளுக்கு அவர்கள் சுயமாக வருமானம் ஈட்டும் வகையில் வில்லிசையை கற்றுக் கொடுத்து கிராமிய கலைகளில் ஈடுபட உதவி வருகிறார். தோவாளையைச் சார்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு ஏழை சிறுவனின் படிப்புக்கான அனைத்து செலவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதோடு, 8 வயது மனவளர்ச்சி குன்றிய குழந்தையை தத்தெடுத்து பராமரித்தும் வருகிறார்.

இவ்வாறு முன்மாதிரியாக திகழ்ந்து, அவர்கள் முன்னேற்றத்துக்காக வில்லிசை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரியும் சந்தியா தேவி 2024-ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதுக்கு தேர்வானார். அவரதுசேவையைப் பாராட்டி, தலைமைச் செயலகத்தில் சிறந்த திருநங்கைக்கான விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தியாதேவிக்கு வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கீதாஜீவன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சமூக நலத்துறை செயலர் ஜெய முரளிதரன், ஆணையர் வே.அமுதவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You may also like

© RajTamil Network – 2024