சமாஜ்வாடி தலைவர் அசம் கானுக்கு 10 ஆண்டு சிறை

by rajtamil
Published: Updated: 0 comment 56 views
A+A-
Reset

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் ராம்பூர் மாவட்டம் தானா கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் அப்ரார். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அலே ஹசன் மற்றும் பர்கத் அலி ஆகிய இருவர் அப்ரார் வீட்டுக்குள் நுழைந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் அள்ளி வீதியில் வீசிய அவர்கள், அப்ராரை வலுக்கட்டாயமாக வீட்டை காலி செய்ய வைத்தனர். இந்த சதியின் பின்னணியில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முகமது அசம் கான் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக அசம் கான் உள்பட 3 பேர் மீதும் அப்ரார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த வழக்கில் அலே ஹசனுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் அசம் கான் மற்றும் பர்கத் அலி மீதான வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. அப்போது முகமது அசம் கான் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கில் அசம் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும் அவருக்கு ரூ.14 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அதே போல் பர்கத் அலிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

You may also like

© RajTamil Network – 2024