Sunday, September 22, 2024

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்: புதிய மைல்கல்லை எட்டிய ஜேம்ஸ் ஆண்டர்சன்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன் முதலாவது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் முதல் நாளிலேயே 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 371 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் 6 பேர் அரை சதம் அடித்து அசத்தினர்.

பின்னர் 250 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 2-வது நாள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. ஜோஷ்வா டி சில்வா 8 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் மற்றும் அட்கின்சன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் இன்னும் 171 ரன்கள் பின்தங்கி உள்ளது. கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளதால் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. இத்தகைய சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் சாதனை ஒன்றை எட்டி உள்ளார். அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 40,000-க்கும் அதிகமான பந்துகள் வீசியவர்கள் பட்டியலில் முதல் வேகப்பந்து வீச்சாளராக ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை படைத்துள்ளார்.

அவர் தற்போது வரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 40,001 பந்துகள் வீசியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 40,000-க்கும் அதிகமான பந்துகள் வீசியவர்கள் பட்டியலில் அவர் 4வது இடத்தில் உள்ளார். அந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் சுழற்பந்து வீச்சாளர்களான முத்தையா முரளிதரன் (44,039 பந்துகள்), அனில் கும்ப்ளே (40,850 பந்துகள்), ஷேன் வார்னே (40,705 பந்துகள்) ஆகியோர் உள்ளனர்.

இந்த பட்டியலில் 4வது இடத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் (40,001 பந்துகள் *), 5வது இடத்தில் ஸ்டூவர்ட் பிராட் (33,698 பந்துகள்) ஆகியோர் உள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024