‘சவுக்கு சங்கரை நேரில் பார்த்தது இல்லை’ – கஞ்சா வியாபாரி பரபரப்பு வாக்குமூலம்

by rajtamil
0 comment 41 views
A+A-
Reset

கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

பெண் போலீசார் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசியதாக யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீது கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அவரை கடந்த 4-ந்தேதி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கோவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சவுக்கு சங்கர் தங்கி இருந்த விடுதி அறை மற்றும் அவர் வந்த காரில் போலீசார் சோதனை செய்தனர். அதில், 409 கிராம் கஞ்சா இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக சவுக்கு சங்கர், அவருடைய உதவியாளர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ராம்பிரபு, கார் டிரைவர் சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து அவர்களுக்கு கஞ்சா விற்றதாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த மகேந்திரன் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணையில் மகேந்திரனுக்கு கஞ்சா விற்றது ராமநாதபுரம் மாவட்டம் கிடாத்திருக்கை பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 32) என்பது தெரியவந்தது.

இதற்கிடையே புதுக்கோட்டையில் மற்றொரு வழக்கில் சிறையில் இருந்த பாலமுருகனையும் இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு மதுரை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் பழனிசெட்டிபட்டிக்கு நேற்று முன்தினம் மாலையில் பாலமுருகனை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். நேற்றும் அவரிடம் விசாரணை நடந்தது. விசாரணையை தொடர்ந்து அவர் மீண்டும் மதுரை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக போலீசார் நடத்திய விசாரணையில் பாலமுருகன் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், "சவுக்கு சங்கரை நான் நேரில் பார்த்தது இல்லை. சமூக வலைத்தளங்களில் தான் அவருடைய பேச்சை கேட்டுள்ளேன். மகேந்திரனிடம் தான் நான் கஞ்சா கொடுத்தேன். அவர், ராம்பிரபுவுக்காக வாங்கிச் செல்வதாக கூறியிருக்கிறார். நான் ஆந்திராவுக்கு அடிக்கடி சென்று வருவதால் அங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வந்தேன்" என்று அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

You may also like

© RajTamil Network – 2024