Wednesday, October 2, 2024

சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்: தேனி காவல் துறை நடவடிக்கை

by rajtamil
Published: Updated: 0 comment 12 views
A+A-
Reset

சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்: தேனி காவல் துறை நடவடிக்கை

தேனி: யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சவுக்கு சங்கர் தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் கடந்த மே 4-ம் தேதி தங்கியிருந்தார். அப்போது கோயம்புத்தூர் போலீஸார் அவரை கைது செய்தனர்.அவரது கார் மற்றும் விடுதி அறையை சோதனை செய்த போது கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பழனிசெட்டிபட்டி போலீஸார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் இன்று (ஆக.12) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பி பொதுமக்களை போராடிய தூண்டியதாக சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செயப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை (ஆக.9) தீர்ப்பளித்த நீதிபதிகள், “சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவும், அவர் மீது தொடர்ச்சியாக போடப்பட்டுள்ள வழக்குகளும் உள்நோக்கத்துடன் பதியப்பட்டவை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டத்துக்காக கடந்த மே மாதம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் தாமதமாக வழக்குப் பதிவு செய்து அந்த வழக்கின் அடிப்படையில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர்.

சவுக்கு சங்கர் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அதுகுறித்த காரணங்களை உத்தரவில் தெரிவிக்கவில்லை. சவுக்கு சங்கர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானவையாக தெரியவில்லை. எனவே அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உள்நோக்கம் கொண்டது என்பதால் அந்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக கூறியிருந்தது.

மேலும், வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் தேவையில்லை என்றால் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தேனி மாவட்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024