Saturday, September 21, 2024

சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை – கே.பாலகிருஷ்ணன்

by rajtamil
0 comment 25 views
A+A-
Reset

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கின்றன; இது தமிழகத்திற்கு அழகல்ல என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது ஒரு கும்பல் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணின் தாய், தந்தை உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கின்றன. ஆணவக் கொலைகள் நடப்பது தமிழகத்திற்கு அவப்பெயர்; இது தமிழகத்திற்கு அழகல்ல. கட்சி அலுவலகத்தில் பட்டப்பகலில் தாக்குதல் நடக்கும் அளவுக்கு யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. காவல்துறையின் பார்வையாளராக அரசு இருப்பதை அனுமதிக்க முடியாது.

யாரையும் கடத்திச் சென்று திருமணம் செய்து வைக்கவில்லை. நாடி வருவோரை பாதுகாக்கிறோம். காதலை பெற்றோரே ஏற்றுக் கொண்டாலும், சில சாதி அமைப்புகள் தான் இதை ஊதி பெரிதாக்குகின்றன. தூண்டும் சாதி அமைப்புகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேடயமாக இருக்கும். சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024