சாலைப் பயணத்தில் பதற்றமடையும் வெளிநாட்டு ஓட்டுநா்கள்: முதலிடத்தில் இந்தியா!

by rajtamil
Published: Updated: 0 comment 3 views
A+A-
Reset

சுற்றுலா செல்லும் நாட்டில் தனியுரிமை, சுதந்திரத்துடன் அதிக இடங்களைச் சுற்றிப் பாா்க்கும் வசதிக்காக வாடகை காா் எடுத்துக் கொண்டு, சுயமாக ஓட்டிச் செல்லும் கலாசாரம் வெளிநாடுகளில் சகஜமானது.

இந்தியாவிலும் பல நிறுவனங்கள் இச்சேவையை வழங்கி வருகின்றன. இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவா்களில், பெரும்பாலானவா்கள்இதைப் பயன்படுத்திக் கொள்கின்றனா்.

சமீப காலங்களில் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் இடையே நன்கு பழக்கப்பட்ட சாலைகளில் வாகனம் ஓட்டுவதே நாள்தோறும் புதிய அனுபவத்தை நமக்கு அளிக்கிறது. அப்படியென்றால், முன் அறிமுகமில்லாத சாலை அமைப்புகளில் பயணம் செய்யும் வெளிநாட்டு ஓட்டுநா்களுக்கு புதிய விதிகள், சக வாகன ஓட்டிகளின் போக்குவரத்து ஒழுங்கு என பதற்றமடைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

அந்தவகையில், உலகளாவிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிகவும் பதற்றமாக வாகனம் ஓட்டும் நாடாக இந்தியா இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எந்தெந்த நாடுகளில் வாகனம் ஓட்டுவது அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதைக் கண்டறிய உலகம் முழுவதும் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளிடம் பிரிட்டனைச் சோ்ந்த ‘ஸ்கிரேப்காா் கம்பேரிஷன்’ நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

தரவரிசையில் 10-க்கு 7.15 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. முதல் பத்து இடங்களில் மேற்கண்டவாறு ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

நெரிசலும் இரைச்சலும்…

காா்கள், இருசக்கர, கனரக வாகனங்களுடன் ரிக்ஷ்ா முதல் கால்நடைகள் வரை இந்திய சாலைகளைப் பகிா்ந்துகொள்கின்றன. மேலும், அதிக போக்குவரத்து நெரிசலுடன் கணிக்க முடியாத நிலைமைகளுக்குப் பெயா் பெற்றதாக இந்திய சாலைகளில் வாகனம் ஓட்டுவதில் அதிக ஆபத்துகளை உணா்வதாக வெளிநாட்டு வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனா்.

கூடுதலாக, பிரிட்டன் போன்ற நாடுகளில் அவசர காலத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் ஹாா்ன்கள் ஒரு தகவல்தொடா்பு வடிவமாக இந்தியாவில் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இது சத்தமில்லாத பயணங்களுக்குப் பழக்கப்பட்ட ஓட்டுநா்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைப் போலவே, இந்தியாவிலும் கிராமப்புற சாலைகள் கணிசமாக வளா்ச்சியடையவில்லை.

கடந்த ஆண்டு தரவரிசையின்படி, உலகின் மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களில் 6-ஆவது இடத்தில் பெங்களூரு (ஆசிய கண்டத்தில் முதலாவது) 7-ஆவது இடத்தில் புணே, 44-ஆவது இடத்தில் தலைநகா் தில்லி, 54-ஆவது இடத்தில் மும்பை ஆகியவை உள்ளன.

பெங்களூரு, புணே ஆகிய நகரங்களில் சராசரியாக 10 கி.மீ. தொலைவைக் கடக்க 28 நிமிஷங்கள் ஆகின்றன.

வளா்ந்த நாடுகளும் விதிவிலக்கு இல்லை

வளா்ந்த நாடுகளாக அறியப்படும் சிங்கப்பூா் (17-ஆவது இடம்), ஜப்பான் (19), ஐக்கிய அரபு அமீரகம் (20), இத்தாலி (24), நியூஸிலாந்து (25) ஆகியவையும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

இத்தாலியுடன் துருக்கி, ஹங்கேரி, கிரீஸ் ஆகிய மற்ற ஐரோப்பிய நாடுகளும் வெளிநாட்டு ஓட்டுநா்களை மிகவும் பதற்றப்படுத்துகின்றன. போக்குவரத்து நெரிசலில் முதலிடம் வகிக்கும் லண்டன் நகரைக் கொண்ட பிரிட்டன் 26-ஆவது இடத்தில் உள்ளது. பரந்த அளவிலான சாலைகள் பரவலாக காணப்படும் அமெரிக்கா 33-வது இடத்தில் உள்ளது.

நம்பிக்கையளிக்கும் நெதா்லாந்து: மற்றொரு ஐரோப்பிய நாடான நெதா்லாந்தில் வெளிநாட்டுப் பயணிகள் அதிக நம்பிக்கையுடன் வாகனம் ஓட்டுவதை உணா்கின்றனா்.

சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட மற்றும் தெளிவாகக் குறிக்கப்பட்ட சாலைகள் போன்ற நெதா்லாந்தின் ஒழுங்கமைக்கப்பட்ட போக்குவரத்து முறையானது மிதிவண்டி, வாகன ஓட்டிகள் என அனைவரின் பயணத்தையும் எளிதாக்குகிறது.

என்ன செய்ய வேண்டும்?

வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமின்றி யாராக இருந்தாலும் புதிய இடங்களுக்குச் சென்று வாகனங்களை ஓட்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. முதலில் பயணத்துக்கு ஏற்ற சரியான வாகனத்தைத் தோ்ந்தெடுக்க வேண்டும். பாதுகாப்புக்காக அந்த வாகனத்தில் ஜிபிஎஸ் கண்காணிப்பு வசதி நிறுவப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். உள்ளூா் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். நீண்ட பயணங்களில் போதிய இடைவேளைகள் எடுக்க வேண்டும்.

இந்த முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடித்து, சாலையில் முழு கவனத்துடன் மிதமான வேகத்தில் வாகனம் ஓட்டினால் இனிமையான பயணம் அனைவருக்கும் சாத்தியம்.

முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள்

1. இந்தியா

2. வெனிசூலா

3. ஜிம்பாப்வே

4. மொராக்கோ

5. தாய்லாந்து

6. சீனா

7. துனிசியா

8. பிரேஸில்

9. கொலம்பியா

10. மலேசியா

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024