Saturday, October 19, 2024

சாலை போடுவதே தோண்டுவதற்காகவா? மரண வாசல்களாகும் சாலைப் பள்ளங்கள்!!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

ஒரு சாலை தார்சாலையாக மாறுவதே குதிரைக்கொம்பாக இருக்கும் நேரத்தில், அந்த தார் சாலை போடப்பட்டதுமே எங்கிருந்துதான் வருவார்களோ தெரியாது.. ஏதோ ஒரு காரணம் சொல்லி அதனைத் தோண்டிவிடுவார்கள்.

அப்பாடா.. சாலைப் போடப்பட்டுவிட்டது என மக்கள் பெருமூச்சு விடுவதற்குள், அந்த சாலைப் பள்ளத்தில் விழுந்து சிலர் மூச்சை விட்டுவிடுவார்கள்.

சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்து.. சாலையோரப் பள்ளத்தில் விழுந்து, கழிவுநீர் கால்வாயில் விழுந்து என மரண படுகுழிகளாக இருக்கும் சாலைகள், மழைக் காலத்தில் தனது கோரப் பற்களுடன் காத்திருக்கின்றன.. அப்பாவியாக யாராவது சாலையோரம் வருவார்களா என்று?

ஏற்கனவே, தென்மேற்குப் பருவமழைக் காலம் முடிந்துவிட்டது. வழக்கமாக சென்னை மக்களை அதிகம் அச்சுறுத்தும் வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்கவிருக்கிறது. இப்போது இல்லாவிட்டால் எப்போதும் முடியாது என்பது போல ஒரு சில நாள்களுக்குள் துரித வேகத்தில் சென்னையில் உள்ள சாலைகளை ஊடனடியாக சீரமைக்க வேண்டியதும், சாலையோரம் தோண்டப்பட்டிருக்கும் மரண குழிகளில் யாராவது விழுந்து சாவதற்குள் மூடி விடுவதும், நடைபெற்று வரும் ஓரிரண்டு பாலம் அல்லது மெட்ரோ பணிகளை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நிறைவு செய்து தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்தும் தமிழக அரசு உடனடியாக கலந்தாலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும்.

இதையும் படிக்க.. டாடாவின் முதுகு வலிக்கு வர்ம சிகிச்சை அளித்த கோவை வைத்தியா்!

ஏன் என்றால்..

அக்.9ஆம் தேதி, சென்னை, வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மிகவும் நிதானமாக சாலையில் ஓரமாக இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, சாலையில் இருந்த பள்ளத்தைக் கவனித்து வண்டியை மெதுவாக இயக்க முயன்றார். ஆனால், பின்னால் வந்தவர் இதனை அறியாமல் வாகனம் மீது மோத, முருகேசன் கீழே விழுந்தபோது, மாநகரப் பேருந்தும் அங்கே வந்தது. ஆனால், விழுந்த வேகத்தில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பலியானார். சாலையில் இருக்கும் பள்ளம் சிறிது என்றாலும் அது செய்யும் காரியங்கள் பெரிது என்பதை மாநகராட்சி உணரும் நேரம் இது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பலியான முருகேசன் சென்னை மாநகராட்சிப் பேருந்து ஓட்டுநர் என்பதுதான்.

செப். 29ஆம் தேதி.. சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் டிரங்க் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று சாலையோரமாக மின் கம்பிவடம் பதிப்பதற்காகத் தோண்டிய பள்ளத்தில் விழுந்தது. கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த நால்வர் காயமடைந்தனர். வெளிநாட்டிலிருந்து வந்த நண்பரை விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்த இளைஞர்கள் உள்பட நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

செப். 30ஆம் தேதி.. சென்னை அசோக் பில்லர் பகுதியில் சாலையில் தோண்டப்பட்டிருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில், ஐயப்பன் என்பவர் தவறி விழுந்து பலியானார்.

இதே பகுதியில்தான், கடந்த பருவமழையின்போது தனியார் தொலைக்காட்சி ஊழியர் சாலையோரம் தோண்டப்பட்டிருந்த மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தது நினைவிருக்கலாம்.

கடந்த மாதம் பேரூர் அருகே சாலையோரம் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் பைக்குடன் விழுந்து கார்த்திகேயன் என்பவர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து இரவோடு இரவாக அப்பகுதியில் மண் கொட்டி மூடப்பட்டது.

இப்படி சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் சாலையோரப் பள்ளங்களால் நடக்கும் விபத்துகள் சொல்லில் மாளாதவை.

இதற்கிடையே, அடுத்த ஒரு வாரத்துக்கு கனமழை நீடிக்கும், இரண்டு நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருக்கிறது. சாலையில் இருக்கும் பள்ளங்களால் சாதாரண நாள்களிலேயே இத்தனை உயிர்கள் பலியாகும் வேளையில், மழைக் காலம் என்றால் சொல்லவே வேண்டாம். பள்ளம் எது, சாலை எது என தெரியாமல் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் பலியாவதைத் தடுக்க உடனடியாக சென்னை மாநகராட்சியும் அரசும் துரித வேகத்தில் சாலைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டால்.. சில உயிர்களை காப்பாற்றலாம். அவர்களையே நம்பியிருக்கும் குடும்பங்களையும் காக்கலாம்.

அதுபோல, போடப்பட்டிருக்கும் சாலைகளை பருவமழைக் காலம் முடியும் வரை எந்தக் காரணத்துக்காகவும் தோண்ட வேண்டாம் என்றும் உத்தரவிட்டால், இருக்கும் சாலைகளாவது தப்பிக்கும். மக்களும்.

உயிரிழப்புகளுக்கு சில லட்ச இழப்பீடுகள் வேண்டாம்.. நல்ல சாலையே போதும் என ஒருமித்த குரலில் சொல்கிறார்கள் மக்களும்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024