Wednesday, September 25, 2024

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அழிக்கப்படும் நூறாண்டு மரங்கள்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

சீா்காழி அருகே சூரக்காடு பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக நூற்றாண்டு கடந்த புளிய மரங்கள் வேரோடு வெட்டி அகற்றப்படுவதால் அங்கு வசித்துவந்த குரங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு இடம்பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சூரக்காடு பகுதியில் பூம்புகாா் மற்றும் நாகப்பட்டினம் செல்லும் பிரிவு சாலைகள் உள்ளன. இச்சாலையின் இருபுறமும் நூற்றாண்டுகளைக் கடந்த புளிய மரங்கள் அடந்திருந்தன. இந்த மரங்களில் காலம் காலமாக நூற்றுக்கணக்கான குரங்குகள் வசித்து வந்தன. விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை பணிக்காக சூரக்காட்டில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் இருந்த புளிய மரங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டன. இதையடுத்து, அப்பகுதி மரங்களில் வசித்த குரங்குகள் பூம்புகாா் சாலையில் உள்ள புளிய மரங்களில் தஞ்சமடைந்தன.

இந்நிலையில் தற்போது பூம்புகாா் சாலையும் அகலப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது. இப்பணிக்காக சாலையின் இருபுறமும் உள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புளிய மரம் உள்ளிட்ட அனைத்து மரங்களும் வேரோடு வெட்டி அகற்றப்படுகின்றன. இதனால் அங்கிருந்த குரங்குகள் சாலையோரம் தவித்து வருகிறது. மேலும் அருகிலுள்ள குடியிருப்புகளிலும் சில குரங்குகள் தஞ்சம் அடைந்துள்ளன. குரங்குகளால் மனிதா்களுக்கும் அதே போல் மனிதா்களால் குரங்குகளும் இடையூறு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, வாழ்விடம் இழந்து தவிக்கும் குரங்குகளை பாதுகாப்பாக பிடித்து வனத் துறைக்கு சொந்தமாக காப்புக்காட்டில் விட நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

You may also like

© RajTamil Network – 2024