Saturday, September 28, 2024

சிக்கிமில் கனமழை: கடும் நிலச்சரிவால் பாலங்கள் உடைந்தன!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

சிக்கிமில் கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் கனமழையால், பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, மாநிலத்தின் வடக்குப் பகுதிக்கான நுழைவுவாயிலாகக் கருதப்படும் ராங்ராங் பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல பகுதிகளில் பாலம் இடிந்து கீழே விழுந்ததால், மாங்கன் மாவட்டத் தலைமையகம் மாநிலத்தின் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சங்கலாங் பாலம் சேதமடைந்ததால் சோங்க் வழியாக உள்ள மாற்றுப்பாதையும் தடைபட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் தற்போது சேதத்தை மதிப்பீடு செய்து, விரைவில் இணைப்புகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு நாள்களுக்கு சிக்கிமிற்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும், கனமழை முதல் மிக கனமழை வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோரெங் மாவட்டத்தின் தரம்தின் பகுதியில், பல கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்து கால்நடைகளும் காயமடைந்தன.

நீர்த்தேக்கங்களைப் பராமரிக்க நீர்மின் நிலையம் அமைந்துள்ள அணைகளில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிக்கிமின் டீஸ்டா நதியின் கரையில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவுகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் லாவா மற்றும் கலிம்போங் வழியாக மாற்றுப் பாதையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான பிரேம் சிங் தமாங் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த மூன்று நாள்களாக சிக்கிம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து மக்களும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், பாதுகாப்பாக விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சிக்கிம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கட்சித் தொண்டர்கள் விழிப்புடன் இருக்குமாறும், மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தேவைப்படும் இடங்களில் உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், முதல்வர் பிரேம் சிங் தமாங் நிலைமையை கவனித்து வருவதாகவும், அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024