சிங்கப்பூரில் உள்ள இந்திய உணவகங்களில் இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கையைச் சோ்ந்த சமையல் கலைஞா்களை பணியமா்த்த அனுமதிக்கும் பணி அனுமதி விசா, உணவகங்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த சட்டம் அந்நாட்டு அரசால் கடந்தாண்டு செப்டம்பா் மாதம் அமலுக்கு வந்தது. இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கையைச் சோ்ந்த சமையல் கலைஞா்களை சிங்கப்பூரில் உள்ள இந்திய உணவகங்களில் பணி அமா்த்த இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. குறிப்பாக தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் சமையல் கலைஞா்கள் பற்றாக்குறையைப் போக்கவே அந்நாட்டின் மனிதவள அமைச்சகம் இந்த திட்டத்தை கொண்டுவந்தது.
இந்த அனுமதிக்கான விண்ணப்பங்கள் தொடங்கியதில் இருந்து 400 இந்திய உணவகங்கள் இந்த பணி அனுமதிகளை பயன்படுத்தியுள்ளன. இந்த விண்ணப்பங்கள் தொழில் வல்லுநா்கள் மற்றும் இந்திய பாரம்பரிய மையம் உள்பட அரசாங்க அமைப்புகளால் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
இது தொடா்பாக சிங்கப்பூா் இந்திய உணவகங்கள் சங்கத்தின் தலைவா் குா்சரண் சிங் கூறுகையில், ‘பண்டிகைக் காலங்களில் சமையல் கலைஞா்களின் தேவை அதிகரிக்கிறது. ஆனால், சிங்கப்பூரில் உள்ள பல இந்திய உணவகங்களுக்கு அந்நாட்டில் திறமையான சமையல் கலைஞா்கள் எளிதில் கிடைப்பதில்லை’ என்றாா்.
காயத்ரி உணவகத்தின் நிா்வாக இயக்குநா் எஸ் மகேந்திரன் கூறுகையில், ‘இந்தப் பணி அனுமதி சட்டம் மூலம் கடந்த ஓராண்டில் சிங்கப்பூரில் உள்ள இந்திய உணவகங்கள் மிகப் பெரிய மாற்றங்கள் மற்றும் வளா்ச்சியைக் கண்டுள்ளன. அதே நேரம், வெளிநாட்டு ஊழியா்களுக்கான தற்போதைய ஒதுக்கீடு வரம்பு 8 சதவீதமாக உள்ளது. அதாவது, ஒரு வெளிநாட்டு சமையல் கலைஞா்களை பணியமா்த்த 12 உள்ளூா் தொழிலாளா்களை முதலில் பணி அமா்த்த வேண்டும். இந்த விகிதத்தை அரசு அதிகரிப்பதன் மூலம் அது மேலும் பயனுள்ளதாக இருக்கும்’ என்றாா்.