Thursday, October 31, 2024

சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ரூ.1 கோடி மோசடி: பொறியாளர் கைது

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

அம்பத்தூரில் தனியார் நிறுவன அலுவலரிடம் சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில், பொறியாளரை ஆவடி இணையவழி குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

அம்பத்தூர் அருகே புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு (58). இவர், தனியார் நிறுவனத்தில் அலுவலராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரது கைப்பேசியைத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தங்களை சிபிஐ அதிகாரியிடம் கூறி, அறிமுகம் செய்துள்ளனர்.

பின்னர், அவர்கள் ரமேஷ்பாபுவிடம், நீங்கள் பண மோசடி வழக்கில் தொடர்பு உள்ளதால், உங்களுக்கு நீதிமன்ற பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என போலியான நீதிமன்ற உத்தரவைக் காண்பித்தும், அவர்கள் சிபிஐ அதிகாரிகள் போல் உடை அணிந்து வாட்சாப் விடியோ காலில் பேசி உங்களை ரகசியமாக விசாரணை செய்ய வேண்டியுள்ளது எனக் கூறியுளளனர்.

மேலும், அவர்கள் நாங்கள் விசாரணை செய்வதை உங்கள் குடும்ப உறுப்பினரோ அல்லது வேறு யாரிடமோ தெரிவித்தால், அவர்கள் மீதும் வழக்கு தொடர்ந்து 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றுக் கொடுப்போம் என கூறி, ரமேஷ்பாபுவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால், பயந்துபோன ரமேஷ்பாபு, அவர்கள் கேட்ட ரூ.1.09 கோடி பணத்தை அவர்கள் கூறிய வங்கிக் கணக்கில் 4 தவணைகளாக அனுப்பியுள்ளார். விசாரணை முடிந்தவுடன் பணத்தைத் திருப்பித் தருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதன் பிறகு, 2 மாதங்கள் ஆகியும் ரமேஷ்பாபுவின் வங்கிக் கணக்கிற்கு மீண்டும் பணம் வராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

இது குறித்து ரமேஷ்பாபு ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை இணைய வழி குற்றப்பிரிவு போலீஸாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

காவல் ஆய்வாளர் பிரவீன்குமார் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் சென்னை, வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த பொறியாளர் சதீஷ்குமார் (32) என்பவரது வங்கிக் கணக்கில் இருந்து, வட இந்திய மோசடி நபர்களுக்கு பணம் சென்றது தெரிய வந்தது.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 3 கைப்பேசிகள், காசோலை புத்தகம், 7 கிரெடிட் கார்டு மற்றும் ரூ.8,000 பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, போலீஸார் சதீஷ்குமாரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024