சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கிற வக்பு சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் – செல்வப்பெருந்தகை

வக்பு வாரியத்தின் சொத்துகளை முடக்குகிற முயற்சி அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியா ஒரு சமய சார்பற்ற நாடு என்பதை அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை தெளிவாக கூறுகிறது. அதனால், அரசமைப்புச் சட்டத்தில் எல்லா மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. அவை பற்றி உறுப்புகள் 25 முதல் 28 வரை தெளிவாக கூறுகின்றன. இந்நிலையில் மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிற பா.ஜ.க. ஆட்சியாளர்கள் மூன்றாவது முறை ஆட்சியில் அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமராக மோடி பொறுப்பேற்றாலும், அவரது செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை. அரசமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையின மக்களை பாதுகாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் 1954-ல் பிரதமர் பண்டித நேருவின் முயற்சியால் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத்தை பறிக்கிற வகையில் அச்சட்டத்தை திருத்துவதற்கான முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டிருக்கிறது. இத்திருத்தத்தின் மூலம் சிறுபான்மை சமூகத்தில் உள்ள முஸ்லிம் தனவந்தர்கள் சமூக நலனுக்காக நன்கொடையாக வழங்கிய சொத்துக்களான வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதில் இச்சட்டத் திருத்தத்தின் மூலம் மத்திய அரசு தலையிட முற்பட்டிருக்கிறது.

வக்பு வாரிய சட்டத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திருத்தங்களை மேற்கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும், புதிய மசோதாவில் ஏற்கனவே இருந்த வக்பு சட்டத்தில் உள்ள உறுப்பு 40-ன்படி எது வக்பு சொத்து என்பதை வக்பு வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும். இத்திருத்தங்களின் மூலம் வக்பு வாரியத்தின் சொத்துக்களை தனது சொத்து என்று முடிவெடுக்கிற அதிகாரத்தை பறிக்க முயல்கிறது. மேலும், வக்பு வாரியத்தில் இரண்டு முஸ்லிம் பெண்களையும், இரண்டு முஸ்லிம் அல்லாதவர்களையும் அதில் உறுப்பினர்களாக நியமிக்க இத்திருத்தம் வகை செய்கிறது. இது அப்பட்டமாக மத சுதந்திரத்தில் தலையிடுகிற செயலாகும். இந்த சொத்து குறித்து ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதுகுறித்து முடிவு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது. ஆனால், ஏற்கனவே உள்ள வக்பு வாரிய சட்டத்தின்படி இதை முடிவு செய்வது வக்பு தீர்ப்பாயம்தான்.

இந்தியா முழுவதும் வக்பு வாரியத்திற்கு 8.7 லட்சம் எண்ணிக்கையிலான சொத்துகளில் 9.4 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதனுடைய மதிப்பு ரூபாய் 1.2 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது. இதன்படி வக்பு சொத்துகள் இந்தியாவில் மூன்றாவது பெரிய உரிமையாளர் என்ற நிலையில் இருக்கிறது. இத்தகைய சொத்துகளை நிர்வகிக்கிற உரிமையை வக்பு வாரியத்திலிருந்து அபகரித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக பறிக்கிற முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டிருக்கிறது. இந்த முயற்சியை முஸ்லிம் அமைப்புகளும், இந்தியா கூட்டணி கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றன. இஸ்லாமிய சமுதாயத்தில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதுகுறித்து அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தையோ அல்லது வக்பு அமைப்புகளையோ, அதைச் சார்ந்த தலைவர்களையோ கலந்து பேசாமல் தன்னிச்சையாக எதேச்சதிகாரமான முறையில் சிறுபான்மையின சமுதாயத்திற்கு எதிராக வக்பு சட்ட திருத்தத்தின் மூலம் கடுமையான அடக்குமுறை ஏவி விடப்பட்டிருக்கிறது.

தற்போது இத்திருத்தத்தின் மூலம் சொத்து உரிமையை நிர்ணயம் செய்வதை மாவட்ட ஆட்சித் தலைவர் வழியாக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இஸ்லாமிய சமுதாயத்தினரின் நலன்களை பாதுகாக்கிற வகையிலும், பலவிதமான சமூக நலத் திட்டங்களை நிறைவேற்றி, ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிற வக்பு வாரியத்தின் சொத்துகளை முடக்குகிற முயற்சி அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும். இச்சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டுமன காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தில் இன்று எதிர்ப்பு குரல் எழுப்புகின்றன. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மோடி அரசுக்கு நம்பிக்கை இருக்குமேயானால் சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கிற வக்பு சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

Pakistan: 7 Labourers From Multan Killed In Terrorist Attack In Balochistan’s Panjgur

Kerala Launches New Entrance Training Programme Benefiting Over 8 Lakh Students

AI Express-AIX Connect Merger In October First Week; ‘I5’ To Fly Into Sunset