Monday, September 23, 2024

சிவகாசி மாநகராட்சியில் ரூ.1.70 கோடி மதிப்பிலான ஊரணி தூர்வாரும் டெண்டரை ரத்து செய்ய கவுன்சிலர்கள் எதிர்ப்பு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

சிவகாசி மாநகராட்சியில் ரூ.1.70 கோடி மதிப்பிலான ஊரணி தூர்வாரும் டெண்டரை ரத்து செய்ய கவுன்சிலர்கள் எதிர்ப்பு

சிவகாசி: கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1.70 கோடி மதிப்பில் பொத்து மரத்து ஊரணி தூர்வாரும் டெண்டரை ரத்து செய்யும் தீர்மானத்துக்கு சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.

சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர மாமன்றக் கூட்டம் இன்று (செப்.10) நடைபெற்றது. மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணை மேயர் விக்னேஷ் பிரியா, ஆணையர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் சசிகலா, “வார்டுகளில் மழைநீர் கால்வாய்கள் தூர்வார வேண்டி உள்ளது. அதற்காக பொக்லைன் இயந்திரங்களைக் கேட்டால் டீசல் இல்லை என்கிறார்கள். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது,” என்றார். அதற்கு சுகாதார ஆய்வாளர், “ஒரு வாரமாக டீசல் பில் பிரச்சினை இருந்தது. தற்போது சரி செய்யப்பட்டு விட்டது” என்றார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் ரவிசங்கர், “கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பொத்து மரத்து ஊரணியை தூர்வார ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஆரம்பம் முதலே பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. அப்போதே பணிகள் தொடங்கி இருந்தால் இப்போது நிறைவடைந்திருக்கும். டெண்டர் ரத்து செய்யப்பட்டால் அப்பகுதியில் மழைநீர் வெளியேற வழியின்றி பதிப்பு ஏற்படும்” என்றார்.

அதற்கு உதவி பொறியாளர் ரமேஷ், “டெண்டர் விடப்பட்டு இரு ஆண்டுகளுக்கு மேலான நிலையில், வழக்கு பணிகளை தொடரமுடியவில்லை. இதனால் திட்ட மதிப்பு உயர்ந்துவிட்டதாக கூறி ஒப்பந்ததாரர் பணிகளை செய்ய மறுக்கிறார்” என்றார்.

அப்போது கவுன்சிலர் ஞானசேகரன், “நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாநகராட்சி நிர்வாகம் பாரபட்சத்துடன் செயல்பட்டதால், சிலர் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர். அதிகாரிகளின் தவறு காரணமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொத்து மரத்து ஊரணி டெண்டர் ரத்து செய்து தீர்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும்” என்றார். அதற்கு ஆணையர், “நீதிமன்ற வழக்கு முடிந்த பின்னர் ஊரணியை தூர்வாரும்படி மீண்டும் தொடங்கப்படும்” என்றார். அப்போது மேயர், “இந்த தீர்மானம் குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்றார்.

அப்போது கவுன்சிலர் பாக்கியலட்சுமி, “சிறுவர் பூங்கா அமைக்கும் பணிக்கு முதலில் ரூ.87 லட்சம் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. ஆனால் அதன் பின் ரூ.37 லட்சத்துக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாதி பணிகள் மட்டுமே நடந்துள்ளது. தனி நபருக்கு பாதை அமைப்பதற்காக, பூங்காவில் வேலி அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சிறுகுளம் கண்வாய் கரையில் உள்ள பொது சுகாதார வளாகம் செயல்பாடு இன்றி இருப்பதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மேயர்,
“உடனடியாக அளவீடு செய்து பூங்காவுக்கு வேலி அமைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அப்போகு கவுன்சிலர் ஞானசேகரன், “சிவகாசி மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஒப்புதலின்றி, காலி இடங்கள் நத்தம் புறம்போக்கு என மாற்றப்பட்டுள்ளது. ஆர்டிஓ கவனத்துக்கு கொண்டு சென்று அந்த வகை மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறினார். அப்போது கவுன்சிலர் சேதுராமன், “பில் கலெக்டர்கள் பற்றாக்குறை காரணமாக, பெயர் மாற்றம், தீர்வை உள்ளிட்ட பணிகளுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. ஒரு பில் கலெக்டர் 8 வார்டுகள் பார்ப்பதால், அவர்களுக்கு உரிய விவரம் தெரியவில்லை” என்றார். அப்போது மேயர், “மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். முடிவில், இன்றைய கூட்டத்தில் 86 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024