Friday, September 20, 2024

சீறும் பாம்பை கையில் பிடித்த பெண் கைது – வனத்துறை அதிரடி

by rajtamil
Published: Updated: 0 comment 39 views
A+A-
Reset

பாம்பை பிடித்து வீடியோ எடுத்தது தொடர்பாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோவை,

கோவை புலியகுளத்தில் ஒரு கோவில் அருகே பாம்பு ஒன்று காணப்பட்டது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள், அதே பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான், சின்னவேடம்பட்டியை சேர்ந்த உமா மகேஸ்வரி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்து அந்த பாம்பை பிடித்து கோவை வனச்சரக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

முன்னதாக அவர்கள், அலேக்காக பாம்பை பிடித்து கையில் வைத்திருப்பது போன்ற வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அதில் பாம்பு போன்ற அரிய வகை உயிரினங்களை கண்டால் அடித்துக் கொல்லக் கூடாது. எங்களை போன்ற பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் கொடுத்து வன உயிரினங்களை காப்பாற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டனர். அது வைரலாக பரவியது.

இதைத்தொடர்ந்து உமாமகேஸ்வரி, அப்துல் ரகுமான் ஆகியோர் மீதும் உரிய அனுமதி இன்றி பாதுகாக்கப்பட்ட இனத்தை சேர்ந்த பாம்பை பிடித்ததாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பிடிக்கப்பட்ட பாம்பு இந்தியன் ராட் ஸ்னேக் இனத்தை சேர்ந்தது. 5 அடி இருக்கும். இது பாதுகாக்கப்பட்ட அட்டவணை 1-ல் உள்ளது. இந்த வகை பாம்பை வனத்துறையின் அனுமதியின்றி பிடிக்க கூடாது. மேலும் பாம்பை பிடித்து வீடியோ எடுத்தது தொடர்பாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றனர்.

You may also like

© RajTamil Network – 2024