செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்று குற்றச்சாட்டுப் பதிவு ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்று குற்றச்சாட்டுப் பதிவு ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

சென்னை: அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இந்த வழக்கின் குற்றச்சாட்டுப் பதிவுக்காக செந்தில்பாலாஜியை ஆக.2 (நேற்று) நேரில்ஆஜர்படுத்த வேண்டுமென முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், குற்றச்சாட்டுப்பதிவை தள்ளி வைக்க வேண்டுமெனக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் என். பரணிக்குமார் புதிதாக மனு ஒன்றை தாக்கல்செய்திருந்தார்.

அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி எஸ்.அல்லி முன்பாகநடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன் மற்றும் வழக்கறிஞர் என். பரணி்க்குமார் ஆகியோர், இந்த வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாகவும், செந்தில் பாலாஜி எம்எல்ஏ-வாக பதவி வகிப்பதால் எண்ணிடுவதற்காக உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விரைவில் எண்ணிடப்பட்டு விசாரணைக்கு வரும் என்றும், அதுவரை குற்றச்சாட்டுப்பதிவை தள்ளி வைக்கவேண்டுமெனவும், இதுதொடர்பாக வாதிட அனுமதிக்க வேண்டுமென்றும் கோரினர்.

அதற்கு ஆட்சேபம் தெரிவி்த்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எத்தனைமுறை தான் வாய்ப்பளிப்பது என கேள்வி எழுப்பி, செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்று குற்றச்சாட்டுப் பதிவை வரும் ஆக.7-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். அன்றைய தினம் செந்தி்ல் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே புழல் சிறையில் இருந்தவாறு படுத்த படுக்கையாக காணொலியில் ஆஜரான செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் நீதிபதி எஸ்.அல்லி வரும் ஆக.7 வரை நீ்ட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024