Saturday, September 28, 2024

சென்னையில் அனைத்து பொதுக் கழிப்பிடங்களும் தனியார்மயமாகின்றன!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

சென்னையில் அனைத்து பொதுக் கழிப்பிடங்களையும் தனியார்மயமாக்க சென்னை பெருநகர மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 1,167 கோடி மதிப்புள்ள திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு மார்க்கெட், பெசன்ட் நகர் கடற்கரை, கிண்டி ரயில் நிலையம் என சென்னையில் மொத்தமாக 1,002 இடங்களில் உள்ள 7,166 கழிபறைகள் தனியார்மயமாக்கப்படுகின்றன.

முன்னதாக, ராயபுரம், திருவிக நகரில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட கழிப்பறை இருக்கைகள் ரூ. 430 கோடியில் தனியார்மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை முழுவதும் இதனை மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த இரு மண்டலங்களில் பணிகள் வருகிற நவம்பர் மாதம் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | உறவுகளும் நினைவுகளும்… மெய்யழகன் – திரை விமர்சனம்!

தற்போதைய திட்டத்துக்கு ரூ. 1,167 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று கட்டங்களாக முறையே ரூ. 350 கோடி(1-4 மண்டலங்கள்), ரூ. 443 கோடி(7-10 மண்டலங்கள்), ரூ. 373 கோடி(11-15 மண்டலங்கள்) என மூன்று வெவ்வேறு ஒப்பந்ததாரர்களிடம் 9 ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ளது.

கழிவறைகளை சுத்தமாக வைத்திருத்தல், வெளியே சிசிடிவி கேமரா, தண்ணீர் விநியோகம், பணியாளர்கள் என தனியார் நிறுவனங்கள் அனைத்தையும் நிர்வகிக்கும்.

இடித்து மீண்டும் கட்டப்பட வேண்டிய நிலையில் உள்ள கழிப்பறைகள், ரூ. 150 கோடி செலவில் புதிதாகக் கட்டப்படும் என்றும் முதல் ஆண்டு பராமரிப்புக்காக மேலும் ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

இதையும் படிக்க | நெய் என நாம் சாப்பிடுவது எல்லாம் நெய்தானா?

மேலும், இந்த திட்டத்துக்கான டெண்டர் வருகிற அக். 16 ஆம் தேதி தொடங்குகிறது. பொது கழிப்பறைகளை தனியார்மயமாக்கும் திட்டத்துக்கு சென்னை கவுன்சிலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கழிப்பறைகளை சரியாக நிர்வகிக்கவில்லை எனில் அந்த நிறுவனங்கள் அல்லது ஒப்பந்ததாரர் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும்? கழிப்பறைகளைக் கட்ட 3 மாதங்களே போதுமான நிலையில் சென்னை மாநகராட்சி ஏன் ஒரு ஆண்டு கால அவகாசம் கொடுக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒப்பந்தராரிடம் போதிய ஆள்கள் இல்லாததால் தனியார்மயமாக்கப்பட்ட சில கழிப்பறைகளில் இன்னும் பணியாளர்கள் நியமிக்கப்படாததால் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, எனினும் 3 மாதங்களுக்குள் புதிய கழிப்பறைகள் கட்டப்படும் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024