Friday, September 20, 2024

சென்னையில் கிராண்ட்பிரி தடகள போட்டி: 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா முதலிடம்

by rajtamil
Published: Updated: 0 comment 49 views
A+A-
Reset

சென்னையில் நேற்று நடந்த இந்தியன் கிராண்ட்பிரி தடகள போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் முதலிடம் பிடித்தார்.

சென்னை,

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், இந்திய தடகள சம்மேளனம் ஆதரவுடன் 2-வது இந்தியன் கிராண்ட்பிரி தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. பாரீஸ் ஒலிம்பிக் தகுதி சுற்றுகளில் ஒன்றான இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியை இந்திய தடகள சம்மேளன தலைவர் அடில் சமரிவாலா தொடங்கி வைத்தார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா உள்பட பலர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். இருபாலருக்கும் 200, 400 மீட்டர் ஓட்டம் உள்பட 9 வகையான பந்தயங்கள் நடத்தப்பட்டன.

இதில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் (57.28 வினாடி) முதலிடம் பிடித்தார். ரெயில்வே ஊழியரான அவர் கோவையை சேர்ந்தவர் ஆவார். பஞ்சாப் வீராங்கனை ரமன்தீப் கவுர் (1 நிமிடம் 01.60 வினாடி) 2-வது இடமும், ஆந்திர வீராங்கனை முகடா ஸ்ரீஷா (1 நிமிடம் 03.06 வினாடி) 3-வது இடமும் பெற்றனர்.

போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) பந்தயத்தில் தமிழக வீராங்கனை பரனிகா இளங்கோவன் 4 மீட்டர் உயரம் தாண்டி முதலிடத்தை தனதாக்கினார். கேரளாவின் மரியா ஜாய்சன் (3.90 மீட்டர்) 2-வது இடத்தையும், தமிழகத்தின் கார்த்திகா (3.10 மீட்டர்) 3-வது இடத்தையும் சொந்தமாக்கினர்.

200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒடிசா வீராங்கனை சர்பானி நந்தா 24.49 வினாடியில் இலக்கை கடந்து முதலிடத்தை கைப்பற்றினார். கர்நாடகாவின் தனிஷ்வரி (25.06 வினாடி) 2-வது இடமும், தமிழகத்தின் திவ்யா (25.26 வினாடி) 3-வது இடமும் பெற்றனர்.

குண்டு எறிதலில் மராட்டிய வீராங்கனை அபா காதுயா (17.13 மீட்டர்), தமிழக வீராங்கனைகள் ஷர்மிளா (12.90 மீட்டர்), வைஷ்ணவி (12.82 மீட்டர்) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர். ஈட்டி எறிதலில் பீகார் வீராங்கனை அஞ்சனி குமாரி (47.75 மீட்டர்), தமிழக வீராங்கனை ஹேமமாலினி (47.47 மீட்டர்), ராஜஸ்தான் வீராங்கனை லலிதா சவுத்ரி (42.09 மீட்டர்) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை வசப்படுத்தினர்.

ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் (ஏ பிரிவு) தமிழக வீரர்கள் சந்தோஷ் குமார் (46.46 வினாடி) முதலிடமும், அவினாஷ் (47.30 வினாடி) 2-வது இடமும் பிடித்தனர். அரியானா வீரர் கபில் (47.66 வினாடி) 3-வதாக வந்தார்.

போல்வால்ட் பந்தயத்தில் தமிழக வீரர்கள் யுகேந்திரன் (5.20 மீட்டர்) முதலிடத்தையும், கவுதம் (5.10 மீட்டர்) 2-வது இடத்தையும் தட்டிச் சென்றனர். கேரள வீரர் சித்தார்த் (4.90 மீட்டர்) 3-வது இடம் பெற்றார்.

டிரிபிள் ஜம்ப்பில் (மும்முறை தாண்டுதல்) தமிழக வீரர் முகமது சலாலுதீன் (16.40 மீட்டர்) முதலிடம் பிடித்தார். கேரள வீரர் கார்த்திக் (16.20 மீட்டர்) 2-வது இடத்தையும், தமிழக வீரர் மோகன் ராஜ் (16.02 மீட்டர்) 3-வது இடத்தையும் பெற்றனர். இந்த போட்டியில் ஒலிம்பிக் போட்டிக்குரிய தகுதி இலக்கை எந்தவொரு வீரர், வீராங்கனையும் எட்டிப்பிடிக்காமல் ஏமாற்றம் அளித்தனர்.

You may also like

© RajTamil Network – 2024