சென்னையில் டிச.6-ம் தேதி நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன், விஜய் பங்கேற்பு
சென்னை: சென்னையில் டிச.6-ம் தேதி நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் ஆகியோர் பங்கேற்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை 1999-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக விசிக முன்வைத்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் கடந்த செப்.12-ம் தேதி நிர்வாகிகளுடன் பேசும்போது, ஆட்சியில் பங்கு தொடர்பான கருத்தை திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்த காணொலி, வெளிநாட்டு பயணத்தை முடித்து முதல்வர் தமிழகம் திரும்பிய நிலையில், திருமாவளவனின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து நீக்கப்பட்டது சர்ச்சையானது. எனினும், இந்த கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என திருமாவளவன் உறுதிபட தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, விசிக இல்லாமல் வடமாவட்டங்களில் திமுக வென்றிருக்க முடியாது என்பது உள்ளிட்ட விமர்சனங்களை தெரிவித்த நிலையில், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், கூட்டணியில் தொடர்கிறோம் எனக் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் திருமாவளவன்.
இந்நிலையில், கடந்த 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்திய கட்சித் தலைவர் விஜய், கூட்டணியில் சேருவோருக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று அறிவித்தார். இதன்மூலம் அவர் விசிகஉள்ளிட்ட கட்சிகளுக்கு மறைமுகமாக கூட்டணி அழைப்பு விடுப்பதாகபேசப்பட்டது.
விஜய்யின் ஆட்சியில் பங்கு தொடர்பான கருத்துக்கு விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆதரவு தெரிவித்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவனோ, "பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனைபோல" ஆட்சியதிகாரத்தில் பங்கு என்ற அரசியல் உத்திவெளிப்பட்டுள்ளது என கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்த கருத்து மோதல்களுக்கு இடையே, இரு தலைவர்களும் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒரே மேடையை பகிர்ந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்பேத்கர் தொகுப்பு: ஒரு வார இதழ் சார்பில் சட்டமேதை அம்பேத்கர் குறித்த தொகுப்பு ஒன்று தயாராகி வருகிறது. இத்தொகுப்பில் நீதிபதி சந்துரு, இந்து என்.ராம், விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உட்பட 40-க்கும் மேற்பட்டோர் பங்களிப்பு செய்துள்ளனர். சென்னையில் வரும் டிச.6-ம் தேதிநடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க அம்பேத்கரை கொள்கை தலைவர்களாக ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில்விசிக தலைவர் திருமாவளவனுக்கும், தவெக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் இருவரும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். தன்னுடைய கட்சி மாநாட்டில் ஆட்சியில் பங்கு என தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்த நிலையில், திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவின் தலைவரான திருமாவளவன், விஜய்யுடன் ஒரே மேடையில் பங்கேற்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.