Saturday, September 28, 2024

சென்னையில் வருகின்றன தனியார் இடுகாடுகள், சுடுகாடுகள்!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், விரைவில், சென்னை மாநகருக்குள், அனைத்து வசதிகளுடன் கூடிய தனியார் இடுகாடுகள், சுடுகாடுகள் அமைக்க சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கவிருக்கிறது.

ஏற்கனவே இருக்கும் 230 இடுகாடுகளும், 42 சுடுகாடுகளும் எப்போதும் கூட்டமாக இருக்கும் நிலையில்தான், தனியார் இடுகாடுகள், சுடுகாடுகள் அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி உருவாக்கியிருக்கிறது.

இதையும் படிக்க.. 30 ஆண்டுகளுக்கு முன்.. தந்தையை கொன்று புதைத்த தாய், சகோதரர்கள்! காட்டிக்கொடுத்தது ஏன்?

வெள்ளிக்கிழமை நடைபெற்ற சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில், இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் குடியிருக்கும் அல்லது நீர்நிலைகளிலிருந்து 30 மீட்டர் தொலைவில், 0.5 ஏக்கர் நிலத்துடன், தனியார் சுடுகாடுகள் மற்றும் இடுகாடுகளுக்கு அனுமதி வழங்குவது என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

நில உரிமையாளர்கள், இந்த தனியார் சுடுகாடு அல்லது இடுகாடு அமைக்கும் இடத்துக்கு தலா ஒரு சென்ட் நிலத்திற்கு 500 ரூபாய் உரிமக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் மற்றும் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். அதாவது, ஒரு சென்ட் நிலத்துக்கு ரூ.500 வீதம் 0.5 ஏக்கருக்கு ரூ.25,000 செலுத்தி உரிமம் பெற வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் தலா ஒரு சென்ட்டுக்கு ரூ.100 ஆகும். உரிமத்தைப் புதுப்பிக்கத் தவறினால் 100 சதவீதம் பதிவுக் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும்.

தனியார் சுடுகாடு மற்றும் இடுகாட்டில், குடிநீர் வசதி, ஓய்விடம், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம், சிசிடிவி கண்காணிப்பு, 6 மீட்டர் உயரத்துக்கு சுற்றுச்சுவர்கள், வெளிநபர்கள் வராமல் தடுக்கவும், நாய் உள்ளிட்ட விலங்குகள் நுழையாமல் தடுக்கவும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.

இடுகாடு அல்லது சுடுகாட்டுக்கு வரும் உடல்களின் அனைத்து விவரங்களையும் பதிவு செய்திருக்க வேண்டும், சுடுகாடாக இருந்தால், எரிக்கப்படும் உடல்களின் சாம்பல்கள் எப்போது வழங்கப்படுகின்றன என்பதற்கான நேரம் கூட தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கூறுகையில், தனியார் இடுகாடு மற்றும் சுடுகாடுகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றார்.

இந்த தீர்மானத்துக்கு எதிராக சில கவுன்சிலர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே சில சமுதாயத்தினருக்கு என இடுகாடு, சுடுகாடுகள் உள்ளன. இந்த நிலையை தனியார்கள் உள்ளே நுழையும்போது நிலைமை மோசமாகும் என்றும், இந்த முறையை ஒழிக்கவே முன்னாள் முதல்வர் கருணாநிதி கடுமையாக போராடினார், ஆனால், தற்போது தீர்மானம் அதனை மீண்டும் உருவாக்கிவிடும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் கோபிநாத் கூறியுள்ளார்.

இந்த வழிகாட்டுதல்களில், எந்த தனிப்பட்ட சமுதாயத்துக்கும், மதத்துக்கும் என குறிப்பிட்டு இந்த இடுகாடுகள், சுடுகாடுகள் அமைக்கப்படக் கூடாது என ஒரு விதி உருவாக்கப்படவில்லை என் இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ரேணுகா தெரிவித்துள்ளார்.

விரைவில், இதற்கான ஒப்பந்தம் கோரப்படவிருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024