சென்னையில் வெள்ள நீரை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

சென்னையில் வெள்ள நீரை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு குறிப்பிடும்படியாக மழை பெய்யாததாலும், மாநகராட்சி சார்பில் மழை நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதாலும் சென்னை மாநகரின் முதன்மைச் சாலைகளில் செவ்வாய்க்கிழமை பகலில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்திருக்கிறது. அதனால் போக்குவரத்து ஒருபுறம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், பொதுமக்களும் நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர்.

அதேநேரத்தில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் உட்புறச்சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தேங்கியுள்ள மழை நீர் இன்னும் வெளியேற்றப்படவில்லை. அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி அந்த பகுதிகளிலும் இயல்பு நிலையைத் திரும்பச் செய்வதற்கு சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்க |சென்னை அம்மா உணவகங்களில் 2 நாள்களுக்கு இலவச உணவு! முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததையும், அதிக எண்ணிக்கையிலான நீர் இறைப்பான்கள் கொண்டு வரப்பட்டு தேங்கிக் கிடந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டதையும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் மழை நீர் தேங்காமல் தடுப்பதில் சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் தோல்வியடைந்து விட்டன. திருப்புகழ் குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தவாறு மழை நீர் வடிகால்கள் முழுமையாக அமைக்கப்பட்டிருந்தால் சென்னையில் எந்தப் பகுதியிலும் மழை நீர் தேங்காமல் தடுத்திருக்க முடியும்.

சென்னையில் இந்த முறை எதிர்பார்த்ததை விட குறைவாகவே மழை பெய்திருக்கிறது. இன்னும் இரு மாதங்கள் நீடிக்கக் கூடிய வடகிழக்கு பருவமழைக் காலத்தில் எதிர்பார்ப்பை விட அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அத்தகைய சூழல் ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் சென்னையில் இன்னும் முடிக்கப்படாத மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு முடிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024