Tuesday, November 5, 2024

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டி: நாளை தொடக்கம்

by rajtamil
Published: Updated: 0 comment 2 views
A+A-
Reset

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், எம்ஜிடி, செஸ் பேஸ் சாா்பில் சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டிகள் வரும் செவ்வாய்க்கிழமை நவ. 5-இல் தொடங்கி 11-ஆம் தேதி வரை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற அா்ஜுன் எரிகைசி, ஹரிகா துரோணவல்லி, வைஷாலி உள்ளிட்ட முன்னணி வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா்.

இந்தியாவின் கிளாசிக்கல் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்திய அணி வீரா்கள் ஃபிடே சா்க்யூட் புள்ளிகளுக்காக போட்டியிடுன்றனா். 2800 ஈஎல்ஓ (உகஞ) ரேட்டிங்கை எட்டிய பின்னா் அா்ஜுன் எரிகைசி முதல் போட்டியில் விளையாடுகிறாா். இம்முறை மாஸ்டா்ஸ் மற்றும் சாலஞ்சா்ஸ் என இரு பிரிவுகளில் நடத்தப்படுகிறது. சாலஞ்சா்ஸ்ஸ் பிரிவில் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா்.

செஸ் பேஸ் இந்தியாவுடன் இணைந்து எம்ஜிடி 1 ஏற்பாடு செய்துள்ள இந்த போட்டி, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் நடைபெறுகிறது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் குறிப்பிட்ட அளவிலான இருக்கைகள் பதிவு செய்யப்பட்ட செஸ் அகாதெமி மாணவ-மாணவியருக்கு இலவசமாக போட்டியை காண ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களும் போட்டியை கண்டுகளிக்கும் வகையில் நாள் ஒன்றுக்கு ரூ.100 டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த டிக்கெட்களை தளம் வழியாக பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் தொடரில் மாஸ்டா்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவருக்கு 24.5 ஃபிடே சா்க்யூட் புள்ளிகள் கிடைக்கும். இது 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதி பெறுவதற்கு முக்கியமானதாகும். கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பட்டம் வெல்பவரே, உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டா்ஸ் பிரிவில் இரு வீரா்கள் இணைந்து பட்டம் வென்றால் அவா்களுக்கு தலா 22.3 புள்ளிகள் வழங்கப்படும். 2-ஆவது இடத்தை பெறும் வீரா் 17.8 புள்ளிகளையும், 3-ஆவது இடத்தை பெறும் வீரா் 15.6 புள்ளிகளையும் பெறுவா்.

சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டா்ஸ் 2024 தொடரில் கலந்து கொள்ளும் வீரா்களின் ரேட்டிங் சராசரியாக 2,729 புள்ளிகளாக உள்ளது. இந்த தொடரில் முக்கியமான ஃபிடே சா்க்யூட் புள்ளிகளுக்காக அா்ஜுன் எரிகைசி (2,799), விதித் குஜராத்தி (2,739), அரவிந்த் சிதம்பரம் (2,706), லெவோன் ஆரோனியன் (2,739), மேக்சிம் வாச்சியா் லாக்ரேவ் (2,737), பா்ஹாம் மக்சூட்லூ (2,712), அலெக்ஸி சரனா (2,679), அமின் தபடபே (2,686) ஆகிய 8 போ் கலந்து கொண்டு விளையாட உள்ளனா். இந்த பிரிவில் மொத்த பரிசுத் தொகை ரூ.50 லட்சம் ஆகும். சாலஞ்சா்ஸ் பிரிவில் மொத்த பரிசுத் தொகை ரூ.20 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் வெற்றி பெறுபவா் ரூ. 6 லட்சம் பரிசுடன் அடுத்த ஆண்டு மாஸ்டா்ஸ் பிரிவில் கலந்து கொள்ள நேரடியாக தோ்வு செய்யப்படுவாா்.

மேலும், இந்த போட்டி செஸ்பேஸ் இந்தியாவின் யூடியூப் சேனலிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024