தீபாவளி விடுமுறையைக் குடும்பத்துடன் கொண்டாட சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வாடிக்கையான விஷயம். இதன் காரணமாக, சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இந்த நிலையில், சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது. அதேபோல, பரனூர், மதுராந்தகம், ஆத்தூர் சுங்கச்சாவடிப் பகுதிகளில் வாகனங்கள் விரைவாக கடந்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பண்டிகை நாள்களில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை காண முடியும் தாம்பரம் அருகேயுள்ள பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையிலும் இந்த முறை போக்குவரத்து நெரிசல் குறைவாகவே உள்ளது. தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் வாகனங்கள் வேகமாக கடந்து செல்வதையும் பார்க்க முடிகிறது. சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு நடவடிக்கைகளால், கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்காமல் வாகன ஓட்டிகள் பயணம் செய்து வருகின்றனர். எனினும், தீபாவளியையொட்டி ஏராளமான மக்கள் கடைகளுக்கு படையெடுத்துள்ளதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுள்ளதை தவிர்க்க இயலாத சூழலும் ஏற்பட்டுள்ளது.